உள்ளாட்சி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்குமா?

362 0

201607101129309084_Civic-polls-boycott-DMDK_SECVPF (1)தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வேறு கட்சியில் சேர்ந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. படுதோல்வி அடைந்ததால் அக்கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி அ.தி.மு.க. – தி.மு.க.வில் சேர்ந்து வருகிறார்கள்.
தொண்டர்கள் விருப்பத்துக்கு மாறாக மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து விஜயகாந்த் தேர்தலை சந்தித்ததால் தே.மு.தி.க.வுக்கு தோல்வி ஏற்பட்டதாக விஜயகாந்த் மீதும் பிரேமலதா மீதும் நிர்வாகிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி தொடர வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விரும்புகின்றனர். இதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தே.மு.தி.க. நிர்வாகிகள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

ஏனென்றால் ஆளும் கட்சியை எதிர்த்து போட்டி போட்டால் வெற்றி பெறுவது சிரமம். கூட்டணியும் சரி கிடையாது. பணம் செலவழித்தாலும் வெற்றிபெற முடியாது. எனவே எதற்கு தேவையில்லாமல் பணம் செலவழிக்க வேண்டும் என்று பலர் குமுறுகின்றனர்.

ஏற்கனவே கடந்த 5 வருடமாக கட்சிக்காக பணம் செலவழித்து கடனாளி ஆகி விட்டோம். இனியும் செலவழிக்க கையில் பணம் கிடையாது என்று சோகத்துடன் பலர் கூறி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்சித் தலைமை பணம் செலவழித்தால் நிற்க தயார் என்ற மனநிலையில் சிலர் உள்ளனர்.

ஆனால் தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வேறு கட்சியில் சேர்ந்து வருவதால் அதை தடுக்க என்ன வழி என்று விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார்.

உள்ளாட்சி தேர்தலில் பணம் செலவழித்து வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்களில் சிலரை அ.தி.மு.க. – தி.மு.க.வினர் எளிதாக தங்கள் கட்சிக்கு அழைத்து சென்று விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது தான் சரியான முடிவாக அமையும். அப்போது தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்ற மனநிலையில் விஜயகாந்த் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் விரைவில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையே தே.மு.தி.க.வில் இருந்து விலகி மக்கள் தே.மு.தி.க.வை ஆரம்பித்த சந்திரகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் சேர்ந்துள்ள நிலையில் தே.மு.தி.க.வில் தேர்தலுக்காக பலகட்டங்களாக கொடுத்த தேர்தல் நிதியை திரும்ப கேட்க முடிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி தே.மு.தி.க. அறக்கட்டளையில் உள்ள பணத்துக்கு கணக்கு கேட்டு வழக்கு தொடரவும் சந்திரகுமார் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் தெரிகிறது.