மட்டு கல்வி வலயமானது கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு முரணாகச் செயற்படுகின்றது-பொ.உதயரூபன்

215 0

மட்டக்களப்பு கல்வி வலயமானது கல்வி அமைச்சினால் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்திற்கு முரணாக எவ்வித சுகாதார வழிமுறைகளையும் பேணாமல் மாணவர்களை பரீட்சை எழுதும்படி அழைப்பித்துள்ளார்கள் என இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் அவர் போது மேலும் தெரிவிக்கையில்,

13ம் திகதி சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை நடத்துவது தொடர்பாக சுற்று நிருபம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர்களுக்குத் தொலைபேசி மூலம் பலவந்தப்படுத்தி இந்தப் பரீட்சையில் கட்டாயம் ஈடுபட வேண்டும் என மட்டக்களப்பு கல்வி வலயத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 55 ஆரம்பப் பாடசாலைகளும் எதிர்வரும் 21ம் திகதி திறப்பது சம்மந்தமாக கல்வி அமைச்சினால் சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்று நிருபத்தின் படி சுகாதார நடைமுறைகளைப் பேணி இந்தப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு சுகாதார அதிகாரிகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் மட்டக்களப்பு கல்வி வலயமானது கல்வி அமைச்சினால் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்திற்கு முரணாக எவ்வித சுகாதார வழிமுறைகளையும் பேணாமல் மாணவர்களை பரீட்சை எழுதும்படி அழைப்பித்துள்ளார்கள்.

பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் தான் பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டும் என எமது ஆசிரியர் சங்கத்தின் வலியுறுத்தியிருக்கின்றது. ஆனால் இந்த வலியுறுத்தலையும் மீறி மாணவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

சுகாதாரப் பணிப்பாளரின் அறிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டமே மிகக் குறைந்த தடுப்பூசிகளைப் பெற்ற மாவட்டமாக இனங்காணப்பட்டுள்ளது. 28 வீதானவர்களே தடுப்பூசிகளைப் பெற்றிருக்கின்றார்கள். மிகக் குறைந்த அளவினர் தடுப்பூசியைப் பெற்ற இந்த மாவட்டத்தில் இவ்வாறு மாணவர்களைப் பரீட்சைக்குத் தோற்றும்படி கேட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயாகும்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான பரீட்சைகள் முன்னெடுக்கப்பட்டு பெரும்பாலான பணம் செலவழிக்கப்பட்டது. அவ்வாறு பணம் செலவழிக்கப்பட்டும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் திருப்பதியாக அமையவில்லை. கடந்த காலத்தில் உயர்தரத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 94 மாணவர்கள் விஞ்ஞான பாடத்தில் ஒரு சித்தியும் பெறாதவர்களாக இருக்கின்றார்கள். அதேபோல் சாதாரண தரத்தில் 55 மாணவர்கள் ஒரு பாடமும் சித்தியடையாதவர்களாக இருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலைமையில் தற்போது மாணவர்கள் உளரீதியான தாக்கங்களுடன் எந்தப் பாடத்திட்டத்தினைப் பூர்த்தி செய்திருக்கின்றார்கள், எந்த வகையில் அவர்களுக்குப் பரீட்சைகளை வைக்க வேண்டும என்ற ஏற்பாடுகள் இல்லாமல் அவர்கள் பரீட்சைக்குத் தோற்றும்படி வற்பறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இது தொடர்பில் கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி செயலாளருடனும் தொடர்பினை ஏற்படுத்தி கிழக்கு மாகாணத்தில் இந்தக் கல்வி வலயத்தில் மட்டும் சுகாதார சுற்று நிருபத்தை மீறி ஏன் இவ்வாறான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என வினவியிருந்தேன். ஆனால் இதற்கு அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.

மாணவர்களை ஆயத்தப்படுத்துவதற்கு கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தின்படி பாடசாலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதே நேரம் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் இடமாற்ற விடயம் பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இல்லாமல் பல ஆசிரியர்கள் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். ஆசிரியர்களைப் பற்றிச் சிந்திக்காத கிழக்கு மகாண ஆளுநர், கல்விச் செயலாளர் ஆகியோர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சையொன்றை நடத்துவதென்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை, கடந்த வருடம் 65 நாட்களே பாடசாலைகள் நடைபெற்றிருக்கின்றன. இதன்படி நாங்கள் உரிய தரப்பினரிடம் அறிவித்தமைக்கமைவாக திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளான புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள் எந்த அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் தெரியாதிருக்கும் போது இந்த கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் பரீட்சையை மையப்படுத்தி மாணவர்களைப் பலவந்தப்படுத்தி பரீட்சைகளில் அவர்களை ஈடுபடச் செய்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.