தலவாக்கலை- கட்டுக்கலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, அத்தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கினார்.
கடந்த மாதம் 28ம் திகதி கட்டுக்கலை தோட்டத்தில் தொழிலாளர்கள் சிலருக்கும் அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது.
இதன்போது தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக இரு பெண் தொழிலாளர்களும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
குறித்த பெண் தொழிலாளர்கள் இருவர் அன்றையதினம் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, அத்தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 8ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இருவரையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவு விட்டிருந்தார்.
இன்று அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபொழுது, தலா ஒரு இலட்சம் ரூபாய்ப்படி சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணைணை டிசம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

