தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் சுடரான 2ஆம் லெப். மாலதி- மா.பாஸ்கரன் யேர்மனி.

574 0

தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துப் பெண்களின் பெரும் எழுச்சிக்கு வித்திட்ட 2ஆம் லெப்டினண்ட் மாலதியவர்களின் 35ஆவது நினைவெழுச்சி நாள் இன்றாகும். விடுதலைப் பயணத்தில் ஒரு மையிற்கல்லாக பெண்களின் இணைவு இருந்த காலத்திற் தமிழீழத்தின் தெருக்களிலே பெண்களின் படையணிகள் உலாவிய பொற்காலமொன்றை இன்று நாம் இழந்துவிட்டபோதும், அந்த நினைவுகள் அக்காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழீழ மக்களையும் என்றுமே ஆட்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

அமைதிப் படையென்ற பெயரில் வந்து அழிப்புப்படையாக மாறிய உலகின் நான்காவது படையென்று மார்தட்டும் இந்திய வல்லாதிக்கப்படை தமிழீழத்திலே நடாத்திய கொடும் வெறியாட்டத்தின் காட்சிகளை இன்று நினைத்தாலும் குருதி உறையும். தமிழினம் இந்தியப்படையா இப்படி நடந்துகொள்கிறது என்று திகைத்து நின்றதை உலகே அறியும். உலகின் நான்காவது பெரிய படையோடு மோதும் எண்ணத்தைத் தவிர்த்துக் காந்தியின் ஆயுதமென்று இந்திய அரசும், அதன் கொள்கைவகுப்பாளர்களும் விதந்துரைக்கும் மென்முறை வழியிலே நீதிகேட்டபோது, அதனைக் கண்டுகொள்ளாது திலீபனவர்களைத் துடிதுடிக்கச் சாகவிட்டு இரசித்தது. அமைதி உடன்பாட்டு நடைமுறைக்குப் புறம்பாகப் 17 வீரர்களைச் சிங்கள அரசிடம் ஒப்படைக்க முனைந்து பன்னிரு வீரர்களைப் பலியெடுத்தது. அதேவேளை ஜே.ஆர் அரசும் கிழக்கு மாகாணத்திலே சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. அதனைத் தடுக்கும் முயற்சியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர். அதனால் கொதிப்புற்ற ஜே.ஆர். விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதாக அறிவித்தார். அதேநாள் (09.10.1987) பின்னிரவில் இந்தியப்படை விடுதலைப் புலிகள் மீது திடீரெனத் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியது.

மாகாணசபையை அமைத்தல், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை எனப் பேச்சுவார்த்தையில் எட்டிய விடயங்களை சிங்களஅரசு கண்டுகொள்ளாதிருப்பதைத் தட்டிக்கேட்க மறந்த இந்திய அரசோ, அதன் படைகளைப் பயன்படுத்தித் தமிழரது வேணவாவை அழிக்க எத்தனிப்பதை உணர்ந்த விடுதலைப் புலிகள் இந்தியாவோடு போரொன்றைத் தொடுப்பதற்கு விரும்பாதநிலையில் இருந்தபோதும், 10.10.1987 பிற்பகலில் இந்தியப்படைகளை எதிர்க்கத் தொடங்கினர்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆயுத வளங்களோடு தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற இலட்சியத்தை வரித்துகொண்ட புலிகளின் அணிகள் இந்தியப் படைகளுக்கெதிரான நடவடிக்கையில் களமிறங்கியபோது, நாவற்குழி முகாமிலிருந்து புறப்பட்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் படையணியொன்று மாலதியவர்களின் தலைமையிலே கோப்பாய்ப் பகுதியிலே நிலையெடுத்துக் காத்திருந்தது.

கண்மூடித் தனமான தாக்குலோடு நாவற்குழிப் படைமுகாமிலிருந்து புறப்பட்ட இந்தியப் படைகளோடு மோதலில் ஈடுபட்ட படையணியில் தீரமுடன் இந்தியப்படைகளை எதிர்த்துப் போரிட்ட வேளையிலே காயமேற்பட்டுவிட விடுதலைப் புலிகளின் மரபேந்தி10.10.1987ஆம் நாளன்று மாலதியவர்கள் வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.

பேதுருப்பிள்ளை சகாயசீலியாகப் பிறந்து தமிழீழ விடுதலைக்காகத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்துப் போராடிய மாலதியவர்கள் இன்று இல்லை. ஆனால் அவரது ஈகம் தந்த தமிழ்ப் பெண்களின் எழுச்சி தமிழீழத்திலே ஆயுதமுனையிலே அச்சுறுத்தலுக்குள்ளாகி முடக்கப்பட்டுடிருக்கின்றது. இந்தச் சூழலிலே, பெண்களின் எழுச்சி பெரும் மாற்றங்களை இந்த உலகிலே தந்திருக்கிறது என்பதைக் கருத்திலேற்றுப் புலம்பெயர் நாடுகளில் வாழும் இளையதலைமுறை மாலதியவர்கள் விட்டுச்சென்ற இடத்திலிருந்து அறிவாயுதமேந்தி எழுதலே அவரது ஈகத்திற்கான கைமாற்றாகும். புலம்பெயர்ந்து வாழும் தலைமுறையே உங்களால் புதிய வரலாற்றைப் படைக்க முடியும். மாற்றம் ஒன்றே மாறாதென்பது, மந்திரத்தால் நிகழ்வதல்ல. அது மனிதர்களின் செயல்வடிவமேயாகும் என்பதை மாலதியவர்களின் நிiiவெழுகை நாளில், உளமேற்று உறுபூண்டெழுதலே, அவரது ஈகத்தினால் ஏற்றிய விடுதலைச் சுடரை அணையவிடாது தொடர்ந்து கொண்டு செல்ல ஏற்ற வழியாகும்.

நன்றி

மா.பாஸ்கரன்
யேர்மனி