புளிச்சுப்போன 13 + + + + இந்திய ஏமாற்றுத் தந்திரம்!

305 0

13வது திருத்தம் இல்லையென்றால் இந்தியாவுக்கு இலங்கையுடன் பேச்சு நடத்தவும், தமது சில தேவைகளை நிறைவேற்றவும், இலங்கைக்குப் பயணங்களை மேற்கொள்ளவும் போதிய காரணமில்லாமல் போய்விடுமென்பது தமிழருக்குத் தெரியாததல்ல. இலங்கையால் புறக்கணிக்கப்பட்டுவரும், புளிச்சுப்போன 13 என்பதை கேட்டுக்கேட்டே தமிழருக்கு அலுத்துப் போய்விட்டது!

இலங்கை அரசியலைப் பொறுத்தளவில் இந்த நாட்கள் இரண்டு விவகாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின அமெரிக்க விஜய ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உரையாற்றுகைக்குப் பின்னராக இந்த நாட்கள் அமைந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புக் குழுவினரதும், இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்லாவினதும் சமகால பயணங்களே இந்த முக்கியத்துவங்கள். இவையிரண்டும் பிளஸ் சம்பந்தப்பட்டவை. ஒன்று, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை. அடுத்தது 13 பிளஸ் அரசியல் தீர்வு.

ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையத்தின் 46வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 46:1 தீர்மானத்துக்குச் சமாந்தரமாக, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனையை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அறிவித்தது.

1968ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்துச் செய்யும் அறிவிப்பு இது.

27 நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் 703 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுள் 628 பேர் இலங்கைக்கான வரிச்சலுகையை ரத்துச் செய்யும் முடிவுக்கு ஆதரவளித்தனர். அரசியல் – பொருளாதார செயற்பாடுகளை மையமாகக் கொண்ட ஒன்றியம் என்னும் வகையில் இதன் முடிவு முக்கியமானது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்ற முடிவை ஒன்றியம் முன்னிறுத்தியதும், இலங்கை அரசு தனது வழமையான பாணியில் இதனை ஆராயவென ஒரு குழுவை நியமித்தது. இக்குழு தனது அறிக்கையை குறுகிய காலத்தில் கோதபாயவிடம் கையளித்தது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சில பிரிவுகளை மாற்றியமைக்கவும், பிரித்தானியாவில் நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக இதனை மாற்றியமைக்கவும் இக்குழு பரிந்துரைத்தது. சட்டத்தை நீக்க பரிந்துரை செய்யவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தை மட்டுமன்றி ஜெனிவாவையும் பேய்க்காட்டும் ஒரு செயற்பாடே இது என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தும் ஒன்றியத்தின் விசேட குழுவொன்று இலங்கை சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்தது.

ஆட்சியாளர்கள், எதிரணியினர், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளுடன் மட்டுமன்றி, காணாமலாக்கப்பட்டோர் பிரதிநிதிகளையும் இவர்கள் சந்தித்தது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இலங்கைக்கு வரிச்சலுகையை வழங்குவதற்கு முன்னர் மனித உரிமைகள் விடயங்களை முக்கியப்படுத்த வேண்டுமென இவர்கள் கோரியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இறுதியில் எதிர்பார்க்கப்பட்டவாறு, அடுத்த ஆறு மாதங்களை இலங்கைக்கு காலக்கெடுவாக ஒன்றியம் வழங்கியுள்ளது. கோதபாயவும் அவரது அணியினரும் வழங்கிய – முன்னேற்ற உறுதிப்பாடுகளை நம்பியே இந்தக் காலஅவகாசம் வழங்கப்பட்டது.

வரிச்சலுகை ரத்தாகுமானால் ஏற்கனவே அதலபாதாளத்திலுள்ள இலங்கையின் பொருளாதாரம் அதற்கும் அப்பால் – இதிலும் பிளஸ் நிலைக்குச் சென்றுவிடும்.

வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் என்பது – மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு இடம்பெறவுள்ள 2022 மார்ச் மாதத்துடன் அமைவது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. அடுத்த ஏப்ரல் மாதம் இலங்கையைப் பொறுத்தளவில் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகையில் கண்டமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

திருத்தப்பட்ட பயங்கரவாத சட்ட தயாரிப்பு, அநுராதபுரம் தமிழ் அரசியல் கைதிகளை தமிழர் பகுதிகளுக்கு இடம்மாற்றுவதென ஆராய்வது, சிறிய எண்ணிக்கை அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய ஆலோசிப்பது என்பவை இப்போதைக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நம்பிக்கையூட்டும் செயற்பாடுகள்.

இலங்கையில் ராணுவ ஆட்சி தொடர வேண்டுமானால் அதற்கு அவசரகால சட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் நகமும் தசையுமாக இருக்க வேண்டுமென்ற நிலையில், கோதபாய அரசு எவ்வாறு இதனை முற்றாக அகற்றும்! அடுத்த சில மாதங்கள் இதற்கு விடை தரும்.

ஐரோப்பிய ஒன்றிய சிறப்புக் குழு தனது களவிஜயத்தை முடித்துக் கொண்டிருக்கையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஸவர்தன் ஸ்ரிங்லாவின் இலங்கைக்கான அட்டகாச விஜயம் ஆரம்பமானது. அட்டகாச என்ற அடைமொழியுடன் இதனை ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைவது இவர் கொழும்புடன் தமது பயணத்தை முடித்துவிடாது தமிழரின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு பயணித்ததையும், சுட்ட மண்ணும் சுடாத மண்ணுமாக இயங்கும் தமிழர் தரப்பினரை சந்தித்ததையும், அவர்களுக்கு இந்திய நிலைப்பாட்டை விளக்கியதையும், அவர்களின் கருத்தை அமைதியாக உள்வாங்கியதுமேதான்.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கை சென்ற இந்திய ஆளும் தரப்பினர் குறிப்பிட்ட சில குழுவினரை மட்டுமே சந்திப்பதும், அதற்கு ஏதுவாக அறிக்கை விடுவதும் வழக்கம்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்ற போதும் வழமையான பாணியிலேயே அவரின் சந்திப்புகளும் இருந்தன. அந்த வகையில் ஹர்ஸவர்தனின் விஜயம் சற்று வேறுவிதமாக இருந்தது. இதற்குக் காரணமும் இருந்தது.

மைத்திரி – ரணில் ஆட்சியில் அவர்களின் கூட்டாளிகளாக (பெயரளவில் எதிர்க்கட்சியாக இருந்தும்) இயங்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் மோடியை எட்டவே வைத்திருந்தனர். அந்த நாலரை ஆண்டில் ஒரு தடவைதானும் இந்தியப் பிரதமருக்கு கடிதம்கூட கூட்டமைப்பு எழுதவில்லை.

மேற்கு நாடொன்றின் பிரதிநிதியாக கூட்டமைப்புக்குள் புகுத்தப்பட்டவரின் வழிநடத்தலில், மைத்திரி – ரணில் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு வருமென்றும், பிளவுபடாத இலங்கைக்குள் தமிழருக்கு தீர்வு உண்டென்றும் அவர் கொடுத்த அறுத்த கயிற்றில் தொங்கிய கூட்டமைப்பின் தலைவர், இந்தியாவை அப்போது புறக்கணித்தே வந்தார்.

இதன் எதிரொலியாக, அவ்வேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி கூட்டமைப்பினரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒரு நிமிடம் மட்டும் சந்தித்து விட்டு, டில்லிக்கு வாருங்கள் பேசுவோம் என்று சொல்லிப் போனாரே தவிர, இவர்களை அங்கு அழைக்கவேயில்லை.

இதன் இன்னொரு பிரதிபலிப்பாகவே, இந்திய வெளியுறவுச் செயலாளர் யாழ்ப்பாணம் சென்று கூட்டமைப்பினருக்கு விருப்பமற்ற விக்னேஸ்வரனின் கூட்டணி, கஜேந்திரகுமாரின் முன்னணியினரை இரவு விருந்துடன் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பில் மாகாண சபையின் அவைத் தலைவரையும், இலங்கை அரசின் குடாநாட்டு அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டது இந்தியாவின் ராஜதந்திரம்.

கூட்டமைப்பினரை தனியாக கொழும்பில் சந்தித்து உரையாடினார். இங்கும் ஒரு வித்தியாசம். வழமையாக இவ்வாறான சந்திப்புகளில் சம்பந்தன் – சுமந்திரன் இணையர்களே பங்குபற்றுவர். சில சமயங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மாவை சேனாதிராஜாவுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஆனால், ஹர்ஸவர்தனுடனான சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், புளொட்டின் தலைவர் சித்தார்த்தனும் இணைக்கப்பட்டனர். அண்மையில் சம்பந்தனைச் சந்தித்த இவர்கள் முறையிட்ட புகார்களால் ஏற்பட்ட மனமாற்றமா, அல்லது வெளியுறவுச் செயலாளர் சம்பந்தனை வலியுறுத்தி அவர்களையும் பங்கேற்க வைத்தாரா என்பது இதுவரை தெரியவில்லை. சாமுக்கும் சுமாவுக்கும்தான் இது வெளிச்சம்.

கூட்டமைப்புடனான சந்திப்பின்போது வெளியுறவுச் செயலாளர் விடுத்த ஒரு வேண்டுகோள் காலத்துடன் பொருந்தியதாகவுள்ளது. தமிழரின் அரசியல் தீர்வு விடயத்துக்கான 13வது திருத்த அடிப்படையில் மாகாண சபை முறைமையை நிறைவேற்ற வேண்டிய விடயத்திலாவது, ஆகக்குறைந்தது தமிழர் தரப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்பதே இவரது வேண்டுகோள்.

இந்த வேண்டுகோள் பொதுநோக்கு அடிப்படையில் நீண்ட காலமாக தமிழ் மக்களிடையே இருந்து வருகிறது. இந்த ஒன்றிணைப்பை குழப்புபவர்களாக புலம்பெயர்ந்த தமிழரின் சில அமைப்புகள் இருப்பதாகவும் அண்மையில் குறை கூறப்பட்டு வருகிறது.

கூட்டமைப்பினரைச் சந்தித்தபோது மட்டும் இந்த வேண்டுகோளை இந்திய வெளியுறவுச் செயலாளர் முன்வைத்தார். அப்படியானால், தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை கூட்டமைப்பினரே குழப்புகிறார்கள் என்று இந்தியா கருதுகிறதா?

கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட வேளையிலிருந்து முதற் பத்தாண்டுகள் ஒன்றாகவிருந்த சிலர் அதிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கும் கூட்டமைப்பினரே காரணமென்பது இந்தியாவுக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளதா?

எதுவாயினும், இந்த வேண்டுகோளை தமிழர் தரப்பினர் அனைவரையும் ஒன்றாக அழைத்து, சந்தித்து உணவருந்தும்போது முன்வைக்க ஹர்ஸவர்தன் ஏன் எண்ணவில்லை? அப்படிச் செய்திருப்பின் அவரது வேண்டுகோளை நேர்மையான ஒன்றாக பார்த்திருக்க முடியும்.

இந்திய அரசியல் அதற்கு இடம்கொடுக்காது. தமிழர் தரப்பை பிரித்து வைத்து செயற்படுவதே இந்தியாவின் ராஜரீக அரசியல். 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையொப்பமிட ராஜிவ்காந்தி கொழும்பு சென்றபோதும் இதுதான் நடந்தது. ஆயுத ஒப்படைப்பிலும்கூட இதுதான் இடம்பெற்றது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் கையளிக்கச் செய்து, தங்களுடன் இணைந்து இயங்கிய குழுக்களுக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கியது. மோடி அரசும் அவ்வழியிலேயே பயணிக்கிறது.

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று தமிழர் தரப்பிடம் அழுத்திக் கூறியுள்ளார் வெளியுறவுச் செயலாளர். இதனையே கோதபாயவிடமும் இவர் வலியுறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

13க்கு அப்பால் – 13 பிளஸ் வருமென்று அன்று சொன்ன ஜனாதிபதியே இன்றைய பிரதமர் மகிந்த. 13 பிளஸ்க்கு என்னவானது? 13வது திருத்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவால் பிரிக்கப்பட்டு 14 ஆண்டுகளாகி, தனித்தனி மாகாண சபைகளும் அமைக்கப்பட்டன. அப்போது இந்தியா எங்கே போனது?

மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை. காவற்துறையும் கிடையாது என்று சகல சிங்கள ஆட்சியாளர்களும் கூறிவிட்டனர். இப்போது மாகாண சபைத் தேர்தல்களே நடைபெறாது என்று சில அமைச்சர்கள் பகிரங்கமாகக் கூறுகின்றனர்.

நிலைமை இவ்வாறு கவலைக்கிடமாக இருக்கையில், 13வது திருத்தம் முழுமையாக அமல் செய்யப்படுமென்று எவ்வாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் நம்பிக்கை தரமுடியும்?

13 இல்லையென்றால் இந்தியாவுக்கு இலங்கையுடன் பேச்சு நடத்தவும், தமது சில தேவைகளை நிறைவேற்றவும், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவும் போதிய காரணமில்லாமல் போய்விடுமென்பது தமிழருக்குத் தெரியாததல்ல.

புளிச்சுப்போன 13 + + + + என்பதைக் கேட்டுக் கேட்டே தமிழருக்கு அலுத்துப் போய்விட்டது!

பனங்காட்டான்