மதுரையில் இன்று 5-வது தடுப்பூசி முகாமில் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் 5-வது சிறப்பு முகாம் இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. தேர்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஊரக- நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 1,400 இடங்களில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த முகாமை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் மதுரை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன்படி முதல் தவணையாக தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், செல்போன், குக்கர், வேட்டி- சேலை வழங்கப்பட உள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களில் பெரிய அளவில் பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். அதில் முதல் தவணையாக தடுப்பூசி போடுபவர் ஒப்புகை சீட்டை போட வேண்டும்.
தடுப்பூசி முகாம் இரவு 7 மணி அளவில் முடிகிறது. அதன் பிறகு அதிகாரிகள் குலுக்கல் மூலம் அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்வார்கள். இதில் முதல் பரிசு பெற்றவருக்கு வாஷிங்மெஷின் பரிசாக வழங்கப்படும். 2-வது பரிசாக 2 பேருக்கு தலா ஒரு செல்போன் வழங்கப்படும். 3-வது பரிசாக 10 பேருக்கு தலா ஒரு குக்கர் வழங்கப்படும்.
சிறப்பு பரிசாக 30 பேருக்கு சேலை மற்றும் வேட்டி, துண்டு வழங்கப்படுகிறது.
இந்த முகாமில் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

