டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் நிலவேம்பு கசாயம் நல்ல பயன் அளிப்பதால் பொதுமக்கள் அதனை தயக்கமின்றி பயன்படுத்தலாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கொரோனா தடுப்பூசி போடுவதற்காக இன்று 5-வது வாரமாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
இருப்பினும் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களில் 20 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசியை இன்னும் போடாமல் உள்ளனர். இதுபோன்ற விஷயங்கள் கொரோனா தடுப்புப் பணியில் சவாலாகவே உள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்ட மாவட்டங்களில் நோய் தொற்று குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி போடுவதற்கு முன்வர வேண்டும்.
போலியோ போல கொரோனா தொற்று இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதனை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை முழுமையாக மக்கள் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தண்ணீர் தொட்டிகளுக்குள் கொசு செல்ல முடியாத அளவுக்கு மூடி வைக்க வேண்டும். நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுவதால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. இதனை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

