ஃபேஸ்புக் சமூக வலைத்தளமானது ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல் என்று அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா விமர்சித்துள்ளார்.
நேற்று அறிவிக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசு, ரஷ்யப் பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் மற்றும் மரியா ரெஸ்ஸா ஆகியோருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோர்வேயின் நோபல் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழங்கிய செவ்வியிலேயே மரியா மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளதுடன், அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல் ஃபேஸ்புக். வெறுப்புக் கருத்துகள் மற்றும் பொய்யான கருத்துகளைத் தடுக்க சமூக ஊடகங்கள் தவறிவிட்டன.
அவை உண்மைகளுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்கின்றன. சமூக ஊடகங்களில் நடக்கும் இந்த ஒன்லைன் தாக்குதல்கள் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளன.
அவை இலக்கு வைக்கப்படுகின்றன. அவை ஒரு ஆயுதத்தை போலப் பயன்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
ராப்ளர் என்ற செய்தித் தளத்தின் துணை நிறுவனரான மரியா ரெஸ்ஸா, தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் வளர்ந்து வரும் சர்வாதிகாரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தி வருகிறார்.
பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி ரோட்ரிகோவின் ஆட்சிக்கு எதிராக ரெஸ்ஸா தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வந்தார்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக ரோட்ரிகோ எடுத்த நடவடிக்கைகளை ரெஸ்ஸா கடுமையாகத் தனது எழுத்தில் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

