ஷாஹீன் புயலால் பெய்த பலத்த மழையில் சிக்கி மஸ்கட் நகரில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் ஷாஹீன் புயல் நேற்று காலை மையம் கொண்டிருந்தது. இந்த புயல் காரணமாக ஓமன் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிக்கூடம், கல்லூரிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். பொதுமக்கள் கடற்கரைக்கு மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் அறிவிப்பைப் பின்பற்றி பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில், ஷாஹீன் புயல் தெற்கு மற்றும் வடக்கு அல் பத்தினா பகுதியில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பலத்த காற்று வீசியது. மேலும் ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிக கனமழை பெய்தது.
இந்த பலத்த மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிய இடமின்றி குளம்போல் தேங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. புயல் காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடல் பகுதியில் வழக்கத்தை விட அலைகள் 5 அடிக்கும் மேல் ஆர்ப்பரித்தது.
மழை காரணமாக மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக விமான சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
மஸ்கட்டின் ருசைல் தொழிற்பேட்டை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் தங்கியிருந்த 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரது உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அமீரத் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்று பலியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையை பாதுகாப்புப் படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், மேலும் 2 பேரையும் காணாமல் தேடி வருகின்றனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவசர சேவையில் உதவிட ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக சுல்தான் ஆயுதப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

