புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணபது அவசியம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

297 0

ஐரோப்பிய ஒன்றியம் தனது கவனத்தை பயங்கரவாத தடைச்சட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடனான நேற்றைய சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிற்கு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வை காணவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவை சந்தித்தனர், இந்த சந்திப்பின்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக புதிய அரசியல் அமைப்பை உருவாக்கவேண்டியதன் அவசியத்தையும், தமி;ழ்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் வலியுறுத்தினர் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நில ஆக்கிரமிப்பு மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் மீது மேற்கொள்ளப்படும் ஏனைய மீறல்கள் குறித்தும் தெரியப்படுத்தியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.