தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நேற்று யேர்மனி ஒஸ்னாபுறுக் நகரமத்தியில் நடைபெற்றது.

239 0

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது 34 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நேற்று ஒஸ்னாபுறுக் நகரமத்தியில் நடைபெற்றது. யேர்மனியில் கடந்த 15ஆம் திகதியிலிருந்து பல்வேறு நகரங்களில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது நினைவுவணக்கத்தோடு கவனயீர்ப்பு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. பதினொராம் நாளான நேற்று ஒஸ்னாபுறுக் நகர இளையவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டு மிகவும் எழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.

வருகை தந்திருந்த வேற்றின மக்களுக்கு மிகப் பொறுமையுடனும், தெளிவுடனும் எமது தாயக நிலைமைகளை எடுத்துக்கூறியதோடு துண்டுப்பிரசுரங்களையும் இளையவர்கள் வழங்கினார்கள். தான் நேசித்த மக்களின் விடுதலைக்காக களத்தில் நின்று சமராடிய ஒரு புரட்சிகர விடுதலை வீரன் அதே மக்களின் விடுதலைக்காக அறவழியில் சென்று உலகம் கண்டிராத வகையில் மாபெரும் ஈகத்தினை நிலைநாட்டினான். வேற்றின மக்கள் மிகவும் வியப்போடு தியாக தீபம் திலீபன் அவர்களின் ஈகத்தின் ஊடாக எமது போராட்ட நியாயப்பாடுகளை யும் புரிந்துகொள்ள முயல்கிறார்கள் என்பதனை தெளிவாக உணர முடிந்தது.

34 ஆண்டுகள் கழித்தும் தனது ஈகத்தின் வாயிலாக இன்றும் எமது போராட்டத்தினை வழி நடாத்தும் லெப். கேணல் திலீபன் அவர்கள் தனது அரசியல் இலக்கில் பெரும் வெற்றி கண்டுள்ளார். அந்த மாபெரும் இலட்சிய வீரனின் கனவினை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியோடு பணியாற்றுவதே அந்த மாவீரனுக்கு நாம் செலுத்தும் உண்மையான வணக்கமாகும். இன்றைய தினம் 12ஆம் நாளான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது உயிர் பிரிந்து எமது விடுதலைக்கு உரமூட்டிய நாள். இந்நாளில் யேர்மனி மத்திய மாநிலம் டுசில்டோவ் (Düsseldorf) நகரிலும், வடமாநிலம் பிறேமன் (Bremen) நகரிலும் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களது நினைவுவணக்க நிகழ்வும் கவனயீர்ப்பு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.