மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து கருத்து.-திருநிலவன்.

245 0

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து கருத்து சொல்ல வேண்டுமானால் மீண்டும் ஒரு முறை இனப்படுகொலையாளிகளுக்கும், இராணுவ ஆட்சியாளர்களுக்கும் சர்வேதரீதியாக ஓர் இராஜதந்திர அந்தஸ்தினை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியாகவே நான் பார்க்கின்றேன்.

மேலும் விழுந்துகிடக்கும் சிறீலங்கா அரசின் பொருளாதத்தினை கட்டி எழுப்பவும், ராஜபக்சேக்களின் ஊழல் சொத்துக்களை இன்னும் பெருக்கவுமே துணை நிற்கும். தொடர்ந்தும் இவர்கள் கூறிவருகின்ற “நல்லிணக்கம்”,”பொறுப்பக்கூறல்” போன்ற சொல்லாடல்கள் கேட்பதற்கே இப்போதெல்லாம் அருவருப்பை ஏற்படுத்துகின்றது. யேர்மன் நாட்டினைச் சேர்ந்த ஒரு பொது அமைப்பான “Pax Christi” எனப்படும் அமைப்பானது சிறிலங்காவுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்த பின்பு 13.05.2010 அன்று அனைத்து ஊடகங்களுக்குமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்கள்.

அந்த அறிக்கையில் மிகத்தெளிவாக சில விடயங்களை நேரடிச் சாட்சிகளாக உறுதிப்படித்தியிருந்தார்கள்.
1.வேறு தேசிய இனம், வேறு சமயங்கள், வேறு கலாச்சாரங்களை சிறீலங்கா அரசு ஏற்றுக்கொள்வதற்கான எந்த நடவடிக்கைகளும் இல்லை.
2.தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் மிகக் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள்.
3.போரின் இறுதி நாட்களில் மட்டும் 70 000 வரையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
4.இராணுவத்தினரை விலக்கி சிவில் நிர்வாகம் மீள அமைக்கப்பட வேண்டும்.
5. பக்கச்சார்பற்ற விசாரணை சிறீலங்கா அரசு மீது எல்லா வகையான யுத்தமீறல்களுக்காகவும் மேற்கொள்ளப்படவேண்டும்.

இவ்வாறாக மிக முக்கிய விடயங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையினை அன்று மனித உரிமை ஆணையாத்திற்கும் அனுப்பியிருந்தார்கள். தமது உயிரைப் பணயம் வைத்து 2010 ஆம் ஆண்டு பல சவால்களுக்கு மத்தியிலும், இராணுவ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நேரடியாக அங்கு சென்று வழங்கிய இந்த அறிக்கைக்கு மேலாக மனித உரிமை ஆணையகத்திற்கு வேறு என்னதான் வேண்டும். இதே காலப்பகுதியில் Amnesty International மிகத்தீவிரமாக சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு சிறீலங்கா தூதரகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களையே நடத்தியிருந்தார்கள்.

இதுமட்டுமல்ல சனல் 4 தொலைக்காட்சியின் ஆதாரங்கள், people’s Tribunal டப்பிளின் விசாரணையும் யேர்மனி பிறேமன் விசாரணையும் அதன் தீர்ப்பும், முக்கிய இராணுவ தரப்பின் சாட்சியங்கள், போர்க்காலத்தில் களத்தில் பணியாற்றிய மருத்துவர்களது ஆதாரங்கள் நேரடிச் சாட்சிகள் என மனித உரிமை ஆணையத்திடம் இன அழிப்பு நடவடிக்கைக்கான எல்லா வகையான ஆதாரங்களும் குவிந்து கிடக்கின்றன.

இதன் பின்பும் மனித உரிமை ஆணையாளர்கள் மாறி மாறி சிங்கள இனவெறி அரசுக்கு கால அவகாசம் வழங்கி ஒட்டுமொத்த தமிழின அழிப்புக்கு அனுமதிப்பதாகவே நான் கருதுகிறேன். இதற்கு எமது அரசியல் தலைமைகளும் துணை போவது கடைந்தெடுத்த அரசியல்த் துரோகம்.

அனைத்துலக மனித உரிமைகள் அவையின் இந்த இசமந்தப் போக்கானது இன்னும் பல ஈராக்குகளையும் லிபியாக்களையும் ஆப்கானிஸ்தான்களையும் உருவாக்கி ஒட்டுமொத்த உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதனை இவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மற்றையபடி என்னைப்பொறத்தமட்டில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை எதுவித முன்னேற்றங்களையும் கொண்டிருக்கவில்லை என்பதனை மீண்டும் உறுதியாக தெரிவிக்கவிரும்புகின்றேன்.
நன்றி.

திருநிலவன்
மனிதாபிமான செயல்ப்பாட்டாளர்
யேர்மனி.