கொரோனா வைரஸை 6-8 விநாடிகளில் அழிக்கும் இயந்திரம்; இலங்கையரால் கண்டுபிடிப்பு

266 0
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார்.

காற்றிலுள்ள வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை சில நொடிகளில் அழிக்கும் அதிவேக (virus air burnable automatic machine) தானியங்கி இயந்திரம் மற்றும் பணம், ஆவணங்களில் காணப்படும் வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை அழிக்கும் தானியங்கி கிருமித்தொற்று நீக்கிக் கருவி ஆகியவை அவரது கண்டுபிடிப்புகளில் அடங்குகின்றன.
பொரளை சுசமவர்தன மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்ற இவர், கொழும்புப் பகுதியில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் மோட்டார் பொறியியல் பயின்றார்.  பின்னர் ஜப்பான் சென்று மோட்டார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் கற்றுள்ளார்.
மலேசியாவிலும் இயந்திரப் பிரிவில் பயிற்சி பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் நம் நாட்டுக்குப் பரவியதால், அவர் தனது அறிவையும் தொழில்முறை அனுபவத்தையும் இணைத்து வைரஸை தோற்கடிக்கும் வகையில் உபகரணத்தை உருவாக்கியுள்ளார். அதன் பிரதிபலனாக நபர் ஒருவரின் சுவாசத்தின் ஊடாக காற்றில் வெளியாகும் பக்டீரியா மற்றும் வைரஸ்களை சில விநாடிகளில் அழிக்கும் இயந்திரத்தை உருவாக்க முடிந்தது என்று புத்திக பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த இயந்திரம் வைத்தியசாலை வார்டில் அல்லது நிறுவனத்தில் நிறுவப்பட்டிருந்தால், நபர் ஒருவருக்கு இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டால் குறித்த இயந்திரம் தும்மல் மற்றும் இருமலை உடனடியாகக் கண்டறிந்து தானாகவே செயற்படும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த இயந்திரம் தும்மல் மற்றும் இருமலால் காற்றில் பரவும் வைரஸ் கிருமிகளை இயந்திரத்திற்குள் ஈர்த்து அனைத்து வைரஸ்களையும் லேசர் மற்றும் அதிக வெப்பத்துடன் எரித்து அழிக்கும் திறன் கொண்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இயந்திரம் புதிய சுத்தமான காற்றை சுற்றுச்சூழலுக்கு வெளியிடும் செயல்முறையைத் தானாகவே மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வியந்திரம் சுமார் நாற்பது முதல் ஐம்பது அடி தூரம் வரையில் தானாகவே செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இயந்திரத்தில் ஆறு விநாடிகளில் முகக்கவசத்தின் கிருமித் தொற்றை நீக்கச் செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறனைக் கொண்டுள்ளது.
பணம் மற்றும் ஆவணங்களை இந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜன்னலில் வைக்கும் போது தானியக்கமாக கதவு திறந்து மூடும் 8 விநாடிகளில் குறித்த வைரஸ்கள் மற்றும் பக்டீயாக்களை அழிக்கும் திறன் கொண்டிருப்பதாக புத்திக பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.