புதின் கூறியதை ஏஞ்சலா மெர்க்கல் கருத்து என மாற்றி கூறிய போப் ஆண்டவர்

166 0

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து புதின் கூறிய கருத்தை ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக போப் ஆண்டவர் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் வானொலி பேட்டி ஒன்றை அளித்தார்.

அப்போது அவரிடம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான அன்னிய படைகள் வாபஸ் பெற்ற பின்னர் உருவாகி உள்ள புதிய அரசியல் நிலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக ஒரு கருத்தை தெரிவித்தார்.

அது, “மற்றவர்கள் மீது தங்கள் சொந்த மதிப்புகளை கட்டாயப்படுத்தி திணிப்பது பொறுப்பற்ற கொள்கை ஆகும். வரலாற்று, இன, மத பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாமல், பிற மக்களின் மரபுகளை முழுமையாக புறக்கணித்து விட்டு, மற்ற நாடுகளில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப நடக்கிற முயற்சிகள் நடக்கின்றன. இவற்றை நிறுத்துவது அவசியம்” என்பதாகும்.

ஆனால் இந்த வார்த்தைகளை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறவில்லை. கடந்த மாதம் 20-ந் தேதி ஏஞ்சலா மெர்க்கல் முன்னிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்தான் கூறி இருக்கிறார். புதின் கூறிய கருத்தை ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக போப் ஆண்டவர் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.