நாட்டில் தற்போது மாவட்ட ரீதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிக விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, 30 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மிகவும் ஒழுங்கான முறையில் வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் சரியான திகதி, இடம் குறித்து உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட மாவட்டங்களிலிருந்து பெறப்படும் பல்வேறு முறைப்பாடுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாகத் தேடிப் பார்த்து நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் பிரதேச மருத்துவ அதிகாரிகள் இடையே நல்ல உறவு பேணப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த வாரத்தில் 4 மில்லியன் கொரோனா தடுப்பூசி கிடைக்கவுள்ளதாகவும் அதில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித் துள்ளார்.

