ஆரணி அருகே நட்சத்திர மிட்டாய் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு மயக்கம்: வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

159 0

ஆரணி அருகே நட்சத்திர வடிவில் உள்ள மிட்டாயை உட்கொண்டதால் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 3 சிறுவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் தொடர்ந்து வரும் நிலையில், நச்சுத்தன்மை கொண்ட ‘வேதி பொருட்கள்’ கலந்த ஒரு சில திண்பண்டங்களை உட்கொண்டு சிறுவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

இந்நிலையில், தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரில் வசிக்கும் புருஷோத்தமன் மகன் யுவராஜ்(8), ஹரிராம் மகன்கள் மகேஷ்(10), தனஞ்செயன்(8) ஆகியோர் விளையாடிவிட்டு நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில், அவர்கள் மூவருக்கும் வாயில் நுரை வடிந்த நிலையில் மயக்கமடைந்துள்ளனர். அவர்களது நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மூன்று பேரையும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களது நிலைமை மோசமாக இருந்ததால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் கூறும்போது, “பிள்ளைகளிடம் கேட்டபோது, எங்கள் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட நட்சத்திர வடிவில் உள்ள சாக்லெட்டை சாப்பிட்டதாக கூறு கின்றனர். இதனை மருத்து வர்களிடம் தெரிவித்துள்ளோம். அதற்கு ஏற்ப சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆபத் தான கட்டத்தை கடந்துள்ளதாக கூறுகின்றனர். எங்கள் பிள்ளைகள் மீண்டு வர வேண்டும்” என்றனர். இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் ராமகிருஷ்ணை நேற்று தொடர்பு கொண்டு கேட்டபோது, “சிறுவர்கள் நட்சத்திர வடிவில் உள்ள ஒரு பொருளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. அதனை கைப்பற்றி, ஆய்வு உட்படுத்தப்படும். மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து, சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திண் பண்டங்களை கண்டறிந்து பறிமுதல் செய்யப் படும்” என்றார்.

மருத்துவர்கள் எச்சரிக்கை

மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “உயிருக்கு தீங்கு விளைவிக்கும் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எச்சரித்துள்ளனர்.