வட்டி சமநிலை திட்டம்-3 ஆண்டுகள் நீட்டிக்க ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள்

203 0

குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமின்றி அனைத்துநிறுவனங்களுக்கும் ஐந்து சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் மூலப்பொருட்கள் கொள்முதல் உட்பட ஆடை தயாரிப்புக்காக வங்கி கடன் பெறுகின்றன. வட்டியில் ஐந்து சதவீதம் மத்திய அரசின் வட்டி சமநிலை திட்டம் வாயிலாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திட்டத்தை புதுப்பித்துவருகிறது. வரும் செப்டம்பர் மாதத்துடன் திட்டம் முடிவடைகிறது.
இந்தநிலையில் கொரோனாவுக்கு பின் தற்போது, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. பிற நாடுகளின் வர்த்தக போட்டியை எதிர்கொள்ள திட்டத்தை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘திட்டம் தொடருமா என்ற சந்தேகத்தால் ஆடைகளின் விலையில் தளர்வு அளிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ஆடை விலை நிர்ணயம், ஆடை தயாரிப்பு திட்டமிடலுக்கு இத்திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களுக்கும் ஐந்து சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கவேண்டும் என்றனர்.