முதலாம் ஆண்டு நினைவு நாள்- அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் மணிமண்டபம் திறப்பு

207 0

கன்னியாகுமரி தொகுதி முன்னாள் எம்.பி. எச்.வசந்த குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று(28) அவரது மணிமண்டபத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திறந்து வைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு செயல் தலைவராகவும், கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும், வசந்த் அன்கோ நிறுவன தலைவராகவும் விளங்கியவர் எச்.வசந்த குமார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது பெயரால் மணிமண்டபம் கட்டப்பட்டு அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கி மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விஜய்வசந்த் எம்.பி. வரவேற்று பேசினார். வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, மகன் வினோத் குமார், மகள் தங்கமலர் ஜெகநாத், மருமகன் ஜெகநாத், மருமகள்கள் நித்யா, சிந்து மற்றும் பேரக் குழந்தைகள் வசந்தகுமார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

மணி மண்டப திறப்பு விழாவில் மறைந்த வசந்தகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்

இதை தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மயூரா ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், தாரகை கத்பட், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் டாக்டர். பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பேசினர்.

நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.