மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும்- வைகோ கோரிக்கை

171 0

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்ததை வரவேற்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர்; ஆற்று நீர், ஊற்று நீர்ப்பாசனம் இல்லாத வறண்ட நிலப்பகுதியாக இருந்தபோதிலும், உடல் உழைப்பை செலுத்தி, குறைந்த அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று, கடந்த 25 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து போராடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அப்போதைய முதல்வர் மணப்பாறைக்கு வந்தபோது, ம.தி.மு.க. சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் கைது ஆனார்கள்.

மணப்பாறை மக்களின் பல ஆண்டுக் கோரிக்கையை உணர்ந்து, அரசு கல்லூரி அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

உயர்கல்வித் துறை அமைச்சரின் சட்டமன்ற அறிவிப்புகளில், தமிழகத்தில் திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், ஏரியூர், ஆலங்குடி, சேர்க்காடு ஆகிய ஊர்களில் இருபாலர் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என்று அறிவித்ததை வரவேற்று நன்றி தெரிவிக்கின்றேன்.

அந்த மகிழ்ச்சியில் மணப்பாறை மக்களும் பங்கேற்கின்ற வகையில், மாண்புமிகு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மணப்பாறையில் அரசுக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும்; நடப்புக் கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.