உலக காணாமல் போனோர் தினம்!

1264 0

உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோரை தேடியலைந்து கொண்டிருக்கும் உறவினர்களின் துயரத்தை கவனம் கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் (ஐ நா ) ஆகஸ்ட் 30 ஆம் நாள் சர்வதேச காணாமல் போனவர்களுக்கான நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நாளாந்தம் உலகின் எங்கோ்ர் மூலையில் காணாமல் போகச் செய்யும் கொடும் செயல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

உலகெங்கும் மொத்தமாக எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது எவருக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால், இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டகாலத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் அவர்களது கைக்கூலி படைகள்,அமைதி படை என்ற போர்வையில் ஈழ மண்ணில் கால் பதித்த இந்திய இராணுவம் …போன்றவற்றால் தமிழ்,இளைஞர் ,யுவதிகள் கடத்தப்பட்டு, கைதாகி காணாமல் செய்யப்பட்டனர்.

இறுதி யுத்ததில் அதாவது முள்ளிவாய்க்கால் மண்ணில் சிறிலங்கா படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞர் , யுவதிகள் எங்கே?

பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர், கணவர்களை கையளித்த மனைவிமார் என கணணீருடன் ஒரு தசாப்தம் கடந்தும் காத்திருக்கிறார்கள்.

ஆயுத முனையில் காணமல் போவோரில் பலர், காணாமல் போன குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டு விடுகிறார்கள் என்பது பலரும் ஏற்றுக்கொள்ள விரும்பாத உண்மையாக உள்ளது.

ஈழத் தீவில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 வரை நடைபெற்ற யுத்தத்தின் போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்தாகவோ உறுதி செய்யப்படவில்லை.

ஈழத்தீவில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களில் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் “காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் பிள்ளைகள் , கணவன், உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா?  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமையான பட்டியலை வெளியிட வேண்டும், எங்கள் உறவினர்களுடன் நாங்கள் வாழும் உரிமையை சிறிலங்கா அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என பத்து வருடங்களுக்கு மேலாக வேண்டி நிற்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உண்மை நிலையைக் கண்டறிய சர்வதேச நாடுகளின் விசாரணை தேவை என ஓங்கி குரல் கொடுக்கின்றனர். ஆனால் சர்வதேசத்தின் காதுககுக்கு அதனை கேட்கும் சக்தி இன்னும் வரவில்லை.