‘‘20 ஆண்டுகளில் சாதித்ததை இழந்து விடாதீர்கள்; தலிபான்களுடன் பேசுங்கள்’’- ஏஞ்சலா மெர்க்கல் உருக்கம்

241 0

ஆப்கன் நலனை கருத்தில் கொண்டு தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முன் வர வேண்டும் என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

இதில், கடந்த திங்கள்கிழமை, காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தில் இறக்கைகளில் ஏறி பயணித்த சிலர் உயிரிழந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் காபூலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை விமானத்தை அனுப்பி மீட்டு வருகின்றன. அங்கிருந்து விமானங்களில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி காலக்கெடுவாக அமெரிக்கா நிர்ணயித்துள்ளது. அதற்குள் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டு குடிமக்களையும் அழைத்து வந்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமெரிக்கா செயல்படுகிறது.

ஆனால் அந்த தேதியை தள்ளிப்போட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு நேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தநிலையில் ஆப்கன் நலனை கருத்தில் கொண்டு தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் முன் வர வேண்டும் என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் எதைச் சாதித்தோமோ அதை முடிந்தவரை பாதுகாப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

எனவே சர்வதேச சமூகம் தலிபான்களுடன் பேச வேண்டும். ஏனென்றால் இந்த கடினமா நேரத்தில் இதனை செய்யாவிட்டால் ஆப்கனில் நீதி மற்றும் அமைதியை ஏற்படுத்த முடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.