மட்டு வவுணதீவில் இருந்து 6 மாடுகளை கடத்திய இருவர் கைது!

164 0

நாட்டில் ஊரடங்கு அமுலில் உள்ளபோது மட்டக்களப்பு பன்சேனை பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு கென்டர் வாகனமொன்றில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச் சென்ற இருவரையும்  மோட்டார்சைக்கிளில் கசிப்பு கடத்திச் சென்ற ஒருவர் உட்பட 3 பேரை  நேற்று புதன்கிழமை இரவு (25) கைது செய்ததுடன் 6 மாடுகள் மற்றும் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.டி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைவாக, வவுணதீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி கே.டி நிசாந்த அப்புகாமியின் வழிகாட்டலில் வழிகாட்டலில் சம்பவதினமான நேற்று இரவு காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த பிரதேசத்திலுள்ள 6 மாடுகளை திருட்டுத்தனமாக பிடித்து சிறிய கென்டர் வாகனமொன்றில், ஏற்றி சுவாசிக்க போதிய இடைவெளி இல்லாமல் முற்றாக மூடிய நிலையில் பசுக்களை வதைக்குள்ளாக்கி கொண்டு காத்தான்குடிக்கு எடுத்துச் சென்ற நிலையில் அந்த வாகனத்தை நிறுத்தி மடக்கி பிடித்து இருவரை கைது செய்ததுடன் 6 மாடுகளையும் மீட்டனர். அதேவேளை பன்சேனை பிரதேசத்தில் இருந்து மோட்டர் சைக்கிள் ஒன்றில் 18.750 மில்லி லீற்றர் கசிப்பு எடுத்துச் சென்ற ஒருவரையும் மடக்கிபிடித்து  கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.

இவ் இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.