மட்டக்களப்பில் ஒருவாரத்தில் கொரோனாவினால் 36 பேர் மரணம் –dr.மயூரன்

174 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்தில் கொரோனாவால் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர் அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் இன்று வியாழக்கிழமை (26) காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். மாவட்டத்தில் தொடர்ச்சியாக அன்டியன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றதுடன் உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றது

இருந்தபோதும் தற்போது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதலாவது தடுப்பூசி 92.41 வீதமானவை ஏற்றப்பட்டுள்ளதுடன் அதில் ஆக குறைந்தளவு தடுப்பூசி 78.84 வீதம் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளது.

இரண்டாவது தடுப்பூசி நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றுவரை 27.33 வீதமான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் வீடுவீடாக இராணுவத்தினரும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே ஊடரங்கு அமுலில் உள்ள நிலையில் கூட தேவையின்றி சிலர் வீதிகளில் நடமாடி வருகின்றனர். இந்த தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொதுமக்களாகிய உங்களால் தான் முடியும் ஆகவே வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றார்.