முல்லைத்தீவு – நாயாறு பகுதியில், தென்பகுதியில் இருந்து வருகைதந்து வாடி அமைத்து பருவகால மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களில் ஒருவர்,கொரோனா தொற்கால் உயிரிழந்துள்ளார்.
நாயாறு பகுதியில், தென்பகுதியில் இருந்து வருகைதந்து வாடி அமைத்து பருவகால மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த 65 வயதுடைய சிலாபத்தை சேர்ந்த வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சுகவீனம் அடைந்த நிலையில், நேற்று (22) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பி.சி.ஆர் பரிசோதனை எடுக்கப்பட்டு, அதன் மாதிரிகள் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், குறித்த நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (23) உயிரிழந்துள்ளார்.
நாயாறு பகுதியில், தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பருவகால மீனவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்றட்டுள்ளதை தொடர்ந்து, ஜூலை மாதம் 03 ஆம் திகதியன்று குறித்த பகுதி முடக்கப்பட்டது.
இந்த நிலையில் பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 50க்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

