ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி 2022-ல் நிறைவடையும்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல்

148 0

சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை என புகார் தெரிவித்து, கடந்த 6-ம் தேதி பொன்னேரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் புதிய மேலாளராக கடந்த 9-ம் தேதி பதவி ஏற்றுக் கொண்ட கணேஷ் நேற்று கும்மிடிப்பூண்டி உள்ளடங்கிய சென்னை – கூடூர் ரயில்வே மார்க்கத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாவட்டம் – திருவொற்றியூர், திருவள்ளூர் மாவட்டம் – பொன்னேரி, எளாவூர், ஆந்திர மாநிலம் – தடா, சூளூர்பேட்டை, கூடூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெற்ற இந்த ஆய்வில், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், தேவைகள், ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பொன்னேரி ரயில் நிலையத்தில் ரயில்பயணிகள் சங்கங்களின் நிர்வாகிகள், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், புறநகர்ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சென்னை ரயில்வே கோட்டமேலாளர் கணேஷ் தெரிவித்ததாவது: பொன்னேரி ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 2 மின்தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன.பயணிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடையும்.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக, தற்போது புறநகர் ரயில்களை அதிகளவில் இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. பல்வேறு இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள், பயணிகளுக்கான நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. அலுவலக நேரங்களில் புறநகர் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில், சென்னை ரயில்வே கோட்ட துணை மேலாளர்ஆனந்த், முதுநிலை மேலாளர் (இயக்குதல்) சிவாஜி அங்கோரா,முதுநிலை வணிக மேலாளர் வைஜெயந்தி மாலா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.