தொடர்ந்து வாய்தா கேட்டதால் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

139 0

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க.-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும், வழக்கை முடிக்க பொது துறை உத்தரவிட்டதாக அறிக்கையில் லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால், பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது தேவையற்றது. செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது என்று கூறி, மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.
இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்க தேவை எழுநத்து. இதுகுறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தும் உத்தரவிட்டனர். இந்த நிலையில்தான், வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில், நியமிக்கப்பட்டார். கடந்த 5-ம் தேதி இவ்வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர்.
இந்நிலையில் 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், வழக்கு விசாரணைக்கு தடைகோரியும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே 3-வது நீதிபதி விசாரிக்க முடியும். எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு  இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில், இந்த வழக்கை விசாரிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர்.
இதற்கு நீதிபதி நிர்மல்குமார், தொடர்ந்து வாய்தா கேட்பதா? என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், விசாரணை தொடர்ந்து நடைபெறும் என வழக்கு விசாரணையை செப்டம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.