ஒரு குறுகிய காலத்திற்கு நாட்டை முடக்குவது, பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது – ஹர்ஷ டி சில்வா

169 0

ஒரு குறுகிய காலத்திற்கு நாட்டை முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உயிர்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் அவர் கேட்டுக்கொண்டதுடன், நாட்டின் முடக்கம் பொருளாதாரத்தை பாதித்தால், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாற்று நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் எதிர்மறையான முடிவுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்திலுள்ள குறைபாடுகள் தற்போதைய பொருளாதார நிலைக்கு வழிவகுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான தன்னிச்சையான முடிவுகளை ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கம் எடுப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

ஒரு மில்லியன் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில், கொரோனா இறப்புகளில் இலங்கை தற்போது உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் முடக்கலை அமுல்படுத்துவதால் , நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நிபுணர்கள்,இலங்கை மத்திய வங்கி மற்றும் வெளிநாட்டு பங்காளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாட வேண்டும். சிலர் கூறுவது போல அது நாட்டிற்கு தீமையை ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

18,000 கொரோனா மரணங்கள் சம்பவிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.யுத்தம் செய்வது போல கொரோனாவுடன் போராட முடியாது.

பொதுமக்களின் சுய தனிமைப்படுத்தல் , கடைகள் மற்றும் நகரங்களை மூடுவதற்கான முடிவுகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் , அரசாங்கத்தின் முடிவுகள் இல்லாததால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலை நீடித்தால் நாடு அராஜக நிலைக்கு செல்லும் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.