தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினால் நடாத்தப்பட்டுவரும் 2021ஆம் ஆண்டிற்கான கலைத்திறன் போட்டியின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் (15:08:2021) வடமத்திய மற்றும் மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டிகள மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று அனர்த்தம் கரணியமாக இம்முறை வடமத்திய மற்றும் மத்திய மாநிலத் தமிழாலயங்களுக்கனை ஒருங்கிணைத்து போட்டிகள் இரு அரங்குகளிற் திட்டமிட்டவாறு நடைபெற்றது.
வூப்பர் கலையரங்கிலே குழுநிகழ்வுக்கான போட்டிகளும், வூப்பெற்றால் தமிழாலயத்திலே அமைக்கப்பட்ட அரங்கிலே பாடற்போட்டிகளுமாக நடைபெற்ற போட்டி இரு அரங்கிலும் மங்கலவிளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. 15 ஆண்டுகளின் முன்பான சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் செஞ்சோலைச் சிறுமிகள் இல்லத்தின் மீதான சிங்கள விமானப்படையினரால் நடாத்தப்பட்ட தாக்குதலிற் கொல்லப்பட்ட அப்பாவிச் சிறுமிகளுக்கான சுடர் மற்றும் மலர் வணக்கத்தைத் தொடர்ந்து வூப்பர் கலையரங்கிலே போட்டிகள் நடைபெற்றன.
தமிழாலய அரங்கிலே நடைபெற்ற வாய்ப்பாட்டு மற்றும் விடுதலைப்பாடற் போட்டிகளிலே பங்கேற்ற அனைவக்கும் போட்டிகளிற் பங்கேற்றவர்களுக்கான மதிப்பளிப்புகளும், வெற்றி பெற்றோருக்கான மதிப்பளிப்புகளும் வூப்பர் கலையரங்கிலே வைத்து வழங்கப்பட்டதோடு, முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கி வெற்றியாளர்களுக்கு அரங்காற்றுகைக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பாடற்போட்டியிலே நாட்டார்பாடல்களும் இடம்பெற்றமை சிற்பிற்குரியதாகும்.

போட்டிகளில் நடுவராக் கடமையாற்றிய கலை ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் அரங்கிலே சிறப்பான மதிப்பளிப்பு வழங்கப்பட்டது. போட்டிகளிலே முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணத்தோடு வெற்றிப்பட்டி அணிந்து சான்றிதழும் வழங்கப்பட்டது.
அதேவேளை போட்டிகளிற் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிற் மாநிலத்திலே முதல் மூன்று நிலைகளைப் பெற்ற தமிழாலயங்கள் அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டதோடு, இவர்களுக்கான சிறப்பு மதிப்பளிப்புகள் மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களில் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 31ஆவது அகவை நிறைவுவிழாவிலே வழங்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு விடுதலை நடனம், வாய்பாட்டு, விடுதலை கானங்கள் வில்லிசை எனத் தொடங்கி காவடி, கரகம், பொய்காற்குதிரையென நிறைவுவரை யேர்மனியிலே தமிழர்கலைகளின் திருவிழாவாகப் போட்டிக்களம் விறுவிறுப்போடு நகர்ந்ததோடு பார்வையாளர்களைப் போட்டியாளர்கள் போட்டி தொடங்கியதிலிருந்து நிறைவுவரை தமது போட்டிகளாற் கட்டிபோட்டிருந்தனர் என்றே கூறலாம்.சிறப்பாக நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற எம் தேசத்தின் நம்பிக்கையோடு அனைவரும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று கூறி நிகழ்வை நிறைவு செய்தமை சிறப்பிற்குரியதாகும்.











































































































