உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

151 0

தி.மு.க. அரசின் 100 நாள் செயல்பாட்டில் சாதகம், பாதகம் என எதையும் கூற முடியாது. இனி வருங்காலங்களில் என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும், அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வோம். தி.மு.க. அரசின் 100 நாள் செயல்பாட்டில் சாதகம், பாதகம் என எதையும் கூற முடியாது. நடுநிலையாக இருக்கிறது. இனி வருங்காலங்களில் என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நாங்களும் வரவேற்கிறோம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார், விரைவில் வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.