அரசாங்கம் அடக்குவதை நிறுத்த வேண்டும் – ரெலோ கோரிக்கை

178 0

ஆசிரியர்கள் சமுதாயத்தில் மிகவும் முக்கியமான வகிபங்கைக் கொண்டிருப்பவர்கள். தனியாக ஊதியத்தை மட்டும் கருதாமல் சொந்த பந்தம் அல்லாத இன மதம் பாராத சகல பிள்ளைகளையும் தங்கள் மாணவச் செல்வங்களாக நினைத்து கல்வியைப் போதிப்பவர்கள்.

எனவே அவர்களின் சம்பள முரண்பாட்டிற்கான போராட்டம் நியாயமானது. இது ஒரு ஜனநாயக ரீதியான நியாயமான போராட்டம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

காலங்காலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதிகளை மட்டும் வழங்கி விட்டு அதனை நிறைவேற்றாது கைவிடும் நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடு பூராகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டங்கள் மிகவும் வலுப்பெற்று இருக்கும் நிலையில் ஆசிரியர்களைக் கைது செய்ததன் மூலமாக இந்த அரசாங்கமானது தனது இரும்புக் கரங்களைக் கொண்டு இப் போராட்டத்தை அடக்க முற்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவ் ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க சகல அரசியல் கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலே அரச உயர் அதிகாரிகளிடம் தங்களுக்கு நற்பெயர்களை ஏற்படுத்திக் கொள்ளவும் எதிர்காலத்தில் பின்கதவால் சென்று முறையற்ற விதத்தில் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் பல அதிபர்கள் முற்படுவது இப் போராட்த்தைக் காட்டிக்கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.

எனவே கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட அனைத்து அரசியற் கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.