பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

395 0

பரம்பிக்குளம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பரம்பிக்குளம் ஆற்றின் வழியாக கேரளாவில் உள்ள பெருங்கல்கூத்து பகுதிக்கு செல்கிறது.பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் உள்ள 9 அணைகளில் முக்கியமானதும், அதிக கொள்ளளவு கொண்டது பரம்பிக்குளம் அணை ஆகும்.

பரம்பிக்குளம் அணையின் உயரம் 70 அடியாக இருந்தாலும் நீர்ப்பிடிப்பு பகுதி அதிகமாக இருப்பதால் 17.820 டி.எம்.சி கொள்ளளவு கொண்டதாகும். பரம்பிக்குளம் அணை நிரம்பிவிட்டால் ஒரு ஆண்டிற்கு பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பிரச்சனை இருக்காது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலத்தில் பரம்பிக்குளம் அணை நிரம்பிவிடும். இந்த ஆண்டு பெய்த மழைக்கு தற்போது பரம்பிக்குளம் அணை 62 அடியை எட்டியுள்ளது. அணையில் மொத்தக்கொள்ளவான 17.820 டி.எம்.சி.யில் தற்போது 15.6 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

தற்போது அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 950 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பரம்பிக்குளம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பரம்பிக்குளம் ஆற்றின் வழியாக கேரளாவில் உள்ள பெருங்கல்கூத்து பகுதிக்கு செல்கிறது. தற்போது அணை 62 அடியை எட்டியதை அடுத்து கேரளாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பி.ஏ.பி திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் சேர்த்து 30.5 டி.எம்.சி அளவிற்கு கொள்ளளவு கொண்டது. இதில் 22.5 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே பயன்படுத்த கூடிய அளவாகும். மீதமுள்ள 8 டிஎம்சி தண்ணீர் டெட் ஸ்டோரேஜ் எனப்படும் பயன்படுத்த முடியாத அளவாகும்.

தற்போது அனைத்து அணைகளிலும் சேர்த்து 27.5 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் பயன்படுத்தக்கூடிய அளவில்19.5 டிஎம்சி உள்ளது. மழைப்பொழிவு கிடைத்தால் இன்னும் சில நாட்களுக்கு பரம்பிக்குளம் அணை நிரம்பிவிடும் என கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் நரேந்திரன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.