டேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் கொன்றனர்: அமெரிக்க ஊடகம்

169 0

புலிட்சர் விருது பெற்ற இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் அவரைக் கொலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஆப்கன் பாதுகாப்புப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடக்கும் மோதலைப் படமெடுக்க கந்தகாருக்குச் சென்றார் டேனிஷ் சித்திக். அங்கு நடந்த சண்டையில் ஜூலை 16ஆம் தேதியன்று கொல்லப்பட்டார்.

டேனிஷ் சித்திக்கின் மரணம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதில் டேனிஷ் சித்திக் எவ்வாறு கொல்லப்பட்டார் என்று தங்களுக்குத் தெரியாது என்றும், எங்களை மன்னிக்குமாறும் தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டேனிஷ் சித்திக் ஒரு பத்திரிகையாளர் என்று தெரிந்தபின்னரே அவரை தலிபான்கள் கொன்றதாக அமெரிக்க ஊடகம் (American Enterprise Institute) செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், “டேனிஷ் சித்திக் ஆப்கன் ராணுவத்தினருடன் இருக்கும்போது தலிபான்கள் தாக்கினர். இதில் அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டேனிஷுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராணுவத்தினர் அவரை மசூதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் மசூதிக்குள் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.

காயமடைந்த டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் பிடித்துச் சென்றனர். அதன் பின்னர் டேனிஷ் சித்திக்கைக் கொன்ற தலிபான்கள் அவரைக் காப்பாற்ற வந்த ஆப்கன் படையினரையும் கொன்றனர். டேனிஷ் சித்திக்கின் அடையாளம் தெரிந்த பின்னரே தலிபான்கள் தாக்கியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.