வடக்கின் புதிய பிரதம செயலாளரை மாற்றி தகுதி வாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் – சுரேஸ்

209 0

நியமனம் என்பது நிச்சயமாக எதிர்கால அபிவிருத்திக்கு உகந்தது அல்ல என்பதை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொண்டு ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் இந்த விடயங்களை எடுத்து கூறி இவரை மாற்றி தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை விடுப்பதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு மாகாண முதன்மைச் செயலாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஒரு சிங்கள இனத்தவர் ஒருவர் நியமனம் பெற்றிருக்கின்றார். வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 95 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழ் பேசும் மக்களாக இருக்கின்றார்கள்.

வடக்கு மாகாணத்தினுடைய அரச கரும மொழியாக தமிழ் மொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் பிரதம செயலாளர் பதவியை வகிக்கக்கூடிய ஒருவராக 12க்கு மேற்பட்ட சிரேஸ்ட அரச நிர்வாக சேவைகள் உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள்.

இவ்வளவும் இருக்கத்தக்கதாக மிகவும் இள வயதுடைய ஒரு சிங்கள அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஒருவரை வடக்கு மாகாணத்திற்கான பிரதம செயலாளராக நியமனம் செய்வதென்பது பொருத்தமற்றது.

பல அனுபவம் வாய்ந்தவர்கள் இங்கு இருக்கின்றார்கள். குறிப்பாக தெய்வேந்திரம் என்பவர் 95க்கு மேற்பட்ட புள்ளிகளை கொண்டவராகவும் இருக்கின்றார். இந்த நிலையில் சகல நியமனங்களையும் கடந்து விருப்பம் இல்லாத ஒருவரை நியமித்துள்ளனர். அவர் வவுனியாவிலிருந்து அனுராதபுரத்துக்கு இடமாற்றம் கேட்டதாகவும் ஒரு செய்தி உள்ளது.
அவ்வாறு இருக்க வலிந்து ஒரு சிங்கள குடிமகனை வடக்கு மாகாணத்திற்கான பிரதம செயலாளராக நியமனம் செய்வதென்பது எந்தவிதத்தில் சரியானது என்பது கேள்வியாக உள்ளது. ஏனைய 8 மாகாணங்களை பார்க்கின்றபோது கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்த மாகாணங்களிலும் சிங்கள இனத்தவர் ஒருவர் பிரதம செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணம் 95 வீதத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை கொண்டுள்ள ஒரு சூழலில், என்ன காரணத்திற்காக ஜனாதிபதியோ அரசாங்கமோ இவ்வாறான ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய தேவை ஏன் வந்தது. ஆள் பற்றாக்குறையா அல்லது நீங்கள் இவ்வாறான ஒருவரை நியமனம் செய்து கொடுத்த அதிகாரங்களை மீள பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையா?

மாகாண சபைகளிற்கு வழங்கப்பட்ட பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. முக்கியமாக வடக்கு மாகாணத்திலிருந்து 51 பாடசாலைகள் மீள தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் மீள மத்திய அரசு பறிப்பதற்கான சூழல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில், ஒரு சிங்களவரை பிரதம செயலாளராக நியமனம் செய்வதென்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தமிழை எழுதவோ வாசிக்கவோ தெரியாத சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அவருக்கு சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ கடிதம் எழுதவேண்டிய சூழ்நிலையும் இல்லாவிட்டால் அவர் உடனடியாக அதை வாசித்து அறிந்து கொள்ளமுடியுமா என்ற பல்வேறான பிரச்சினைகளை இந்த நியமனம் என்பது உருவாக்கியிருக்கின்றது.

இவ்வாறான நியமனம் என்பது வேலைகளை பின்னடைய செய்யும் என்பதுடன், அபிவிருத்திகளையும் பின்னடைய செய்யும். மொழி என்பது முக்கியமான விடயம். ஆகவே 95 வீதம் தமிழ் மக்களைக்கொண்ட மாகாணத்தில் இவ்வாறான நியமனம் என்பது, சகல விடயங்களையும் பின் நோக்கி நகர்த்துவதாகவே இருக்கும்.

அவை மாத்திரமல்லாது அரசாங்கம் தான் விரும்பியவற்றை சாதிப்பதற்கு இவ்வாறான நியமனத்தை கருவியாக பாவிக்கும் என்பதையும் நாங்கள் நம்புகின்றோம். இந்த நியமனம் என்பது மீள் பரிசீலணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
இந்த நியமனம் மீள பெறப்பட்டு தகுதிவாய்ந்த தமிழ் பேசக்கூடிய ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும். அவ்வாறானவர்கள் வடக்கு மாகாணத்தில் இருக்கின்றார்கள். ஆகவே இந்த நியமனம் என்பது நிச்சயமாக எதிர்கால அபிவிருத்திக்கு உகந்தது அல்ல என்பதை சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் புரிந்துகொண்டு ஜனாதிபதியிடமும், அரசாங்கத்திடமும் இந்த விடயங்களை எடுத்து கூறி இவரை மாற்றி தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினுடைய கோரிக்கை.

இது நிச்சயமாக தமிழ் உத்தியோகத்தர்கள் எல்லோரையும் சீண்டி பார்க்கக்கூடியதும், ஏளனப்படுத்தக்கூடியதுமான செயற்பாடாகதான் இருக்கும். ஆகவே ஜனாதிபதி இராணுவத்திலிருந்து வந்தவர். அவர் இருக்க கூடியதாக கீழ் உள்ள ஒருவரை மேல் பதவி நிலைக்கு நியமிக்கப்பட்டால் அவர் எவ்வாறு உணர்ந்து கொள்வார் என்பதை அவர் உணர வேண்டும்.

ஏனெனில் அவ்வாறான நியமனங்கள் இராணுவத்திற்குள்ளும் பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடியது. அந்த வகையில் இவரை மாற்றி புதிய, சரியான சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு நியமனங்களை செய்ய வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.