டொமினிகாவில் ஜாமீன் பெற்ற மெகுல் சோக்சி ஆன்டிகுவா திரும்பினார்

325 0

மருத்துவ காரணங்களுக்காக மெகுல் சோக்சிக்கு டொமினிகா கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

ரூ.13 ஆயிரத்து 500 கோடி வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்றார். அங்கு குடியுரிமை பெற்றிருந்த அவர், கடந்த மே 23-ம் தேதி டொமினிகா நாட்டுக்கு சென்றார். சட்டவிரோதமாக குடியிருந்ததாக அந்நாட்டில் கைது செய்யப்பட்டார்.
ஆன்டிகுவாவில் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டி இருப்பதால், தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு டொமினிகா ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அதை ஏற்று அவரை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், மெகுல் சோக்சி தனி விமானத்தில் நேற்று ஆன்டிகுவாவுக்கு திரும்பினார்.
இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில், என் கட்சிக்காரர் மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் உள்ள தனது வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார். ஆன்டிகுவாவில் மீண்டும் நுழையும்போது அவர் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. அவர் மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். கடத்தலின் போது சித்ரவதை செய்ததால் அவர் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டுள்ளார். டொமினிகாவில் வெற்றியை ருசித்த சட்டக்குழு, ஆன்டிகுவாவில் நீண்ட போராட்டத்திற்கு தயாராகி வருகிறது என்றார்.