ராகம வைத்தியசாலையில் பெண் மருத்துவரின் அறைக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்ததாக 35 வயதுள்ள மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமையன்று சந்தேகத்திற்கிடமான மருத்துவர் தனது அறைக்குள் நுழைந்து தான் ஆடைகளை அணிந்துகொண்டிருந்த போது புகைப்படம் எடுத்ததாக பெண் மருத்துவர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சம்மாந்துறையை வதிவிடமாகக் கொண்ட நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது கைத்தொலைபேசியை பொலிஸார் தமது காவலில் வைத்துள்ளனர்.
சந்தேக நபரான மருத்துவர் சில மாதங்களுக்கு முன்பே ராகம மருத்துவமனையில் இணைந்து கொண்டுள்ளார்.
சந்தேக நபர் வெலிசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
குறித்த நபர் கைதானதைத் தொடர்ந்து குறித்த நபருக்கெதிராக இது போன்ற இரு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதாகவும் தெரியவருகிறது.

