தம்மை கொல்ல வந்தவர்களையும் விடுதலை செய்யும்படி கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் சரத் பொன்சேகா காட்டிய நல்லெண்ணத்தை போல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் காண்பிக்கவேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் கூறியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகா கொலை செய்ய முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சரத் பொன்சேகா விடுதலை செய்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமாறு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதியை பொதுமன்னிப்பின் பேரில் அவரே விடுதலை செய்தார்.
இவ்வாறான ஒரு நிலையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனைகொலை செய்ய முயற்சித்ததாக கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விடுதலைக்கான நல்லெண்ணத்தை சுமந்திரன் காட்ட வேண்டும் எனவும் அவர் கூறினார். அதோடு அண்மையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அதனை நாங்கள் வரவேற்கிறோம். இது அரசியல் விடுதலைக்கான தொடக்கப் புள்ளியாக அமையும். அதேநேரம் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சம்பவத்தை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
11 வருடங்கள் தொடங்கி 26 வருடங்களாக சிறையில் இருக்கும் 60 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியல் அனைத்து நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளேம். சிறையிலுள்ள 60 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்,தண்டணை விபரங்கள், வழக்கு விபரங்கள் போன்ற சகல விபரங்களும் உள்ளடக்கிய கோவை ,225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை சாதகமாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

