நாயாற்றில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்- க.விஜிந்தன்

273 0

கரைதுறைப்பற்று பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் பருவகால மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதந்துள்ளவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீண்டுமொரு கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதி சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தல் பகுதியாக மாறியுள்ளதாகவும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் இன்று(02) மாலை கரைதுறைப்பற்று பிரதேச சபையில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் பருவகால மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருவது வளமையாக மாறிவிட்டது.

இவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து கொவிட் 19 இன் உச்சம் எங்கள் பிரதேசங்களை பாதிப்படைய வைக்கின்ற நிலையில் நாங்கள் குறித்த இடத்துக்கு இன்று சென்றிருந்தோம் ஆயிரம் வரையான சிறுவர்கள் தொடக்கம் பெண்கள் முதியவர்கள் வரை எந்தவிதமான பதிவுகளும் இல்லாமல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களிடம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்துடன் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றோம் ஆனால் சுகாதார துறைக்கு அச்சுறுத்தலான நிலமையாகவே காணப்படுகின்றது.

அங்கு உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்கின்ற நிலையும் காணப்படவில்லை சமூக இடைவெளியும் காணப்படவில்லை அங்கு பல்வேறுபட்ட மாவட்டங்களில் இருந்து மாகாணங்களில் இருந்தும் வந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

சுகாதார துறையினரால் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது இது முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றது.

இதனை தடுப்பதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை சட்டவிரோதமான மீன்பிடி நடைபெற்று வருகின்றது அங்கு எந்த பாதுகாப்பும் அற்றநிலையில் நெருக்கமாக வாடிகள் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இங்கு வந்திருப்பவர்கள் தொடர்பில் எந்த அமைப்புக்களிடமும் பதிவுகள் எதுவும் இல்லை சுகாதாரதுறைக்கு மிகவும் அச்சுறுத்தலாகத்தான் காணப்படுகின்றது.

இதற்கு உடனடியாக அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் ஒரு கொரோனா கொத்தணி ஏற்படாமல் இருக்க வழி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.