செங்கோட்டை அரசு மருத்துவமனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்ட போதில் இருந்தே செயல்பட்டு வருகிறது.இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புற தூய்மை மற்றும் வெளிப்படை தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனையை கண்டறிந்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பாக ‘காயகல்ப்’ என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக 5 பேர் கொண்ட குழு அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். அந்த குழுக்கள் அங்குள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் சென்று கள ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு மதிப்பெண் அடிப்படையில் அறிக்கை சமர்பிக்கும். அதன் அடிப்படையில் மாநிலத்தில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்த மருத்துவமனைகளில் ‘காயகல்ப்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த இடங்களை பிடிக்கும் மருத்துவமனைகளுக்கு ஆறுதல் ரொக்க பரிசுகளும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2020-2021) மத்திய அரசின் விருதான காயகல்ப் விருது தமிழ்நாடு அளவில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. மேலும் முதல் பரிசாக ரூ.15 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டு உள்ளது.
செங்கோட்டை அரசு மருத்துவமனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்ட போதில் இருந்தே செயல்பட்டு வருகிறது.
பிரசவம், தொற்று நோய் பிரிவு, தோல் மருத்துவம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் அந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
60 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தற்போது சுமார் 2 ஆயிரம் பேர் வரை புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். அங்கு கொரோனா சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது.
காயகல்ப் விருது பெற்றுள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனை ஏற்கனவே கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளும் தொடர்ந்து ஆறுதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்றுள்ளது. காயகல்ப் விருதுக்காக மத்திய அரசின் குழு பரிந்துரையின்படி இதுவரை 4 குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு இருந்தது.
அதன் முடிவில் இதுவரை எந்த மாநிலமும் பெற்றிராத வகையில் இந்த ஆண்டு 99.3 சதவீதம் மதிப்பெண்களை அந்த குழு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கி உள்ளது.
விருது குறித்து செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது:-
செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சுத்தம் மற்றும் சுகாதார பணிகளுக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள அனைத்து மருத்துவ பிரிவு டாக்டர்கள், பணியாளர்கள் அர்ப்பணிப்பால் தான் இந்த விருது கிடைத்துள்ளது.

