இலங்கையில் தொடர்கின்றன சித்திரவதைகள்! – யஸ்மின் சூக்கா

220 0

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழர்கள் வெள்ளை வாகனங்களில் கடத்தப்பட்டு, இரத்தக்கறை படிந்த சித்திரவதைக் கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னமும் தொடர்கின்றது என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அல்ல! இலங்கை சித்திரவதை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் செயற்படும் சிறிலங்காப் பாதுகாப்புப் படைகளால் தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பல அண்மைய சம்பவங்களை ஐ.ரி.ஜே.பி. விசாரணை செய்துள்ளது. .

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் இதர செயற்பாடுளிலும் ஈடுபட்டவர்கள் வேறு யார்? இப்படியான செயற்பாடுகளைச் செய்வதற்கு காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு உதவியது யார்? என அரைகுறைத் தமிழில் அவர்கள் கேட்டார்கள்” என பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறினார்.

உள்ளாக்கப்பட்டு, மோசமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்கு 19 வயதே ஆகியிருந்தது. பிரித்தானியா வந்தடைந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களில் மூவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்கள்.

உருமறைப்பு ஆடையில் வந்தவர்கள் பச்சைநிற இராணுவ வாகனம் ஒன்றிற்குள் தள்ளிக் கடத்திச் சென்று, பின்னர் சித்திரவதைசெய்து, திரும்பத்திரும்பப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினார்கள். இது தன்னைத் தற்கொலை செய்துகொள்ளத்தூண்டியது என பதின்ம வயதுத் தமிழர் ஒருவர் விபரித்தார். தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்தில் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் இருந்ததாகவும் அவர் மேலும் விபரித்தார்;

“அவர்கள் என் கண்களைக் கட்டியிருந்த துணியை அகற்றினார்கள். நிலத்தில் முழங்காலில் மண்டியிட்ட நிலையில் நான் இருந்தேன். என்னை வீட்டிலிருந்து கடத்திச்சென்ற படைவீரரும், இன்னும் இருவரும் அங்கே இருந்தார்கள், அவர்களுடன் அதிகாரி போன்று தோற்றமளித்த இன்னொருவரும் எனக்கு முன்னால் இருந்தார். அவர் இராணுவ அதிகாரி போன்று இருந்தார் என்று நான் சொல்வதற்குக் காரணம் அவர் வெறும் பச்சைநிற இராணுவச் சீருடை அணிந்திருந்தார். அவருடைய மார்பில் சில பதக்கங்களும் அவருடைய தோற்பட்டையில்  சில நட்சத்திரங்களும் காணப்பட்டன”

2019 இன் இறுதிப்பகுதியில் இராணுவத்தால் சித்திரவதைக்குள்ளாகி, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பிரித்தானியாவுக்குத் தப்பிவந்த இன்னொரு இளவயதுத் தமிழர் ஒருவரும் தன்னை மூவர் கடத்தியதாகவும் ஒருவர் இராணுவ சீருடையில் இருந்ததாகவும் கூறினார்:

“அவர்கள் என்னைப் பிடித்து இழுத்து, கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டி, வாகனம் ஒன்றுக்குள் தள்ளி, கண்களைத் துணியால் மூடிக் கட்டினார்கள்” என அவர் கூறினார்.

பயங்கரவாத விசாரணைப்பிரிவால் அண்மையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்தினை அடையாளம் காண்பித்தார். அத்துடன் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்து மீண்டும் மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட கட்டடத்தையும் அடையாளப்படுத்தினார்.

“அவர் என்னுடைய முதுகிலும் கீழ்க்காலிலும் உலோகக் கம்பியால் சூடுவைத்தார். அவர் கையுறைகள் அணிந்திருந்தார். அவர் எங்கிருந்து அவ் உலோகக் கம்பியைக் கொண்டுவந்தார் என்பதையோ, எவ்வாறு அதனைச் சூடாக்கினார் என்பதையோ நான் காணவில்லை. நான் வலியில் கத்தினேன், காயங்களின் எரிவு பல வாரங்களுக்கு இருந்தது” இவ்வாறு சித்திரவதைகளிலிருந்து தப்பிவந்த ஒருவர் கூறினார். மேலும் தன்னை கைகளையும் கால்களையும் ஊன்றியவாறு மண்டியிடவைத்த பயங்கரவாத முறியடிப்புப் பிரிவு மலவாசல் வழியாக உலோகக் கம்பியைச் செலுத்தியதாகவும் கூறினார்.

“கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தளவுக்கு இலங்கை பிரபலமானதோ, அந்தளவுக்கு சித்திரவதைக்கும் அந்நாடு பிரபல்யமானது. பல தசாப்தங்களாகத் திட்டமிட்டுத் தொடரும் சித்திரவதை, துஸ்பிரயோகங்களை முழுநாடும் ஏற்றுக்கொண்டு, பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டிய நேரம் இது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டிய நேரம்” எனவும் சூக்கா தெரிவித்தார்.