ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு: நீதியரசர்களின் விலகல் தொடர்கிறது

180 0

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து ; தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.

அதன்படி நேற்று இவ்வழக்கு விசாரணைகளிலுருந்து ஒதுங்கிக் கொள்வதாக நீதியரசர் ஏ.எச்.எம்.ஏ ; நவாஸ் அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து தான் விலகுவதாக நேற்றைய தினம் குறித்த மனு மீதான பரிசீலனைகள் இடம்பெற்ற போது, நீதியரசர் நவாஸ் அறிவித்தார்

அதன்படி பாராளுமன்ற உறுப்பினருமான ; ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் இருந்து விலகும் மூன்றாவது நீதியரசர் நவாஸ் ஆவார்.

ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் தலைவரக செயற்பட்ட தான் மனுதாரர்கள் இருவர் குறித்தும் அவ்வாணைக் குழுவில் சாட்சிகளை செவிமடுத்துள்ளதாக குறிப்பிட்டு, அதன் அடிப்படையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் ஜனக் டி சில்வா கடந்த மே 28 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தனிப்பட்ட காரணிகள் என தெரிவித்து நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடந்த ஜூன் 4 ஆம் திகதி ; மனு மீதான பரிசீலனைகளில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையிலேயே நேற்று நீதியரசர் நவாஸ் விலகியுள்ளார்.

அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது ; உறுப்புரைக்கு அமைய, ; சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஆகியோர் ;தனித் தனியாக ; தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று உயர் நீதிமன்றில் நீதியர்சர் ப்ரீத்தி பத்மன் சுரசேன, ஏ.எச்.எம். நவாஸ், அச்சல வெங்கப்புலி ஆகியோர் ; அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன் பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக திறந்த மன்றில் நீதியரசர் நவாஸ் ; அறிவித்தார்.

நேற்றைய தினம் இம்மனுக்களில் முதலில் ரிஷாத் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 152/2021 எனும் மனு பரிசீலிக்கப்பட்டது. இதில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ; ஆகியோர் ஆஜராகினர்.

ரியாஜ் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 153/2021 எனும் மனு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன ஆகியோர் ஆஜராகினர்.

இவ்விரு மனுக்கள் தொடர்பிலும் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோனும் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேராவும் முன்னிலையானர்.

இவ்வாறான நிலையிலேயே மனுக்கள் மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதக நீதியரசர் ; நவாஸ் அறிவித்த நிலையில்,  குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி ; எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் ; தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், ; சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.டி. குமாரசிங்க, சி.ஐ.டி.யின் பொறுப்பதிகாரி, சி.ஐ.டி. பணிப்பாளர் , சி.ஐ.டி.க்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் , பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசியலமைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ரிஷாத்தின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா, தானே மனுதரராக முன்னின்று ; நேற்று தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், சி.ஐ.டி.யின் பிரதான் பொலிஸ் பரிசோதகர் எஸ்.பி. ஜயசேகர, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.டி. குமாரசிங்க, சி.ஐ.டி. பணிப்பாளர் , சி.ஐ.டி.க்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் , பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசியலமைப்பின் 134 மற்றும் 35 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ரிஷாத் பதியுதீன் சார்பில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில், மனுதாரரான தான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியின் தலைவர் எனவும், 2000 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருவதாகவும், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதாகவும் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தின ; தாக்குதல்கள் தொடர்பில் எந்த அடிப்படைகளும் இன்றி, 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ;தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ; மனுதாரரான ரிஷாத், தனது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக இம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான குளோசஸ் எனும் செப்பு தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட விவகாரத்தில் ; தன் மீது விரல் நீட்டப்பட்டாலும், ; குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல்களுடன் தனக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை என ஆவணங்களையும் இணைத்து ரிஷாத் பதியுதீன் இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், ; கடந்த ; ஏப்ரல் 24 ஆம் திகதி தான் கைது செய்யப்பட்டதும், 27 ஆம் திகதி 90 நாள் தடுப்புக் காவவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ; வழங்கிய அனுமதியும் சட்டத்துக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி ;12 (1, 12 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சமத்துவ அரசியலமைப்பிற்கான உரிமை, 13 (1), 13 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய எதேச்சதிகாரமாக கைது செய்யப்படாமலும், தடுத்து வைக்கப்படாமலும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படாமலும் இருப்பதர்கான உரிமை ஆகியன மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தனது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, ; குறித்த ; மனுவை விசாரணைக்கு ஏற்குமாறும், ; சி.ஐ.டி. யில் தன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார். அத்துடன் ; தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் 500 கோடி ரூபா நட்ட ஈட்டினை பிரதிவாதிகளிடம் இருந்து பெற்றுமாரும்  ரிஷாத், தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றை கோரியுள்ளார்.

ரியாஜ் பதியுதீனுக்காக தானே மனுதாரராக நின்று சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ; தாக்கல் செய்த& ; மனுவில்,

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே தான் ( ரியாஜ்) 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ம் திகதி கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்ப்ட்டுள்ளது.

அத்துடன் அப்போது கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் தான் ; தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பின்னர் சாட்சியங்கள் இல்லையென்ற அடிப்படையில் 2020ம் ஆண்டு செப்டம்பர்பர் மாதம் 29ம் திகதி விடுதலை செய்யப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி வெள்ளவத்தையில் வைத்து தன்னை கைது செய்தமையும், அது தொடர்பில் தடுத்து வைத்துள்ளமையும் சட்ட விரோதமானது எனவும் தனது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அந்த செயர்பாடுகள் உள்ளதாகவும் ரியாஜ் பதியுதீன் சார்பிலான மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து, அதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் ; மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதன்படி 12 (1, 12 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய சமத்துவத்அரசியலமைப்பின்துக்கான உரிமை, 13 (1), 13 (2) ஆம் உறுப்புரைகளுக்கு அமைய ; எதேச்சதிகாரமாக கைது செய்யப்படாமலும், தடுத்து வைக்கப்படாமலும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படாமலும் இருப்பதற்கான உரிமை ஆகியன மீறப்பட்டுள்ளதாகவும் ; அதற்காக 500 கோடி ரூபாவை பிரதிவாதிகளிடம் இருந்து நட்ட ஈடாக பெற்று தருமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.