இந்த அரசாங்கம் மக்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடும்

181 0

சேதனப் பசளை பயன்பாடு தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவூட்டல்களை வழங்கி இரசாயன பசளை பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவேண்டிய வழிமுறையை விடுத்து ஒரு இரவில் இரசாயன உரப் பாவனையை தடை செய்வது என்பது இந்த அரசாங்கம் மக்களை பட்டினியின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடும் நிலைப்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இரசாயன உர பயன்பாட்டை தடை செய்து சேதன பசளைக்கு மாற்றும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சேதன முறையிலான விவசாயத்தையே நாங்கள் விரும்புகின்றோம் அதனை கடந்த காலங்களில் பயன்படுத்தி விவசாயிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள் குறிப்பாக விடுதலைப் புலிகளுடைய காலத்திலேயே இரசாயனப் பசளைகளுக்கான தடைகள் இருந்தபோது சேதனப் பசளையை பயன்படுத்தி விவசாயிகள் அதிக விளைச்சலை பெற்றிருந்தனர்.

விவசாயிகள் பலர் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் பாராட்டுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டனர் அதேபோல இந்த விடயத்தை மக்களுக்கு படிப்படியாக தொகுதி அடிப்படையில் பல்வேறுபட்ட இடங்களை தெரிவு செய்து அது தொடர்பில் விவசாயிகளுக்கு அறிவூட்டி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் ஒரே இரவில் இரசாயன உர இறக்குமதியை தடை செய்து உடனடியாக சோதனை முறையிலான விவசாயத்தை செய்யுமாறு குறிப்பிடுவதென்பது தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களினுடைய தொழில்வாய்ப்பு இன்மை என்பவற்றால் பட்டினியின் விளிம்புக்குச் சென்று இருக்கின்ற மக்களை மேலும் வறுமைக்குள் தள்ளிவிடும் நிலைமையாகவே இது அமைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் தோற்றுப் போயிருக்கிறது என்று சொல்ல வேண்டும் குறிப்பாக தற்போதைய காலத்தில் இந்த மக்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதாக கூறி கொண்டு அதனை கூட இன்னமும் முழுமையாக வழங்கவில்லை கொள்ளை நோய்கள் தொடர்பில் சுகாதார துறையே பொறுப்புக்கூற வேண்டும்.

அதை விடுத்து இராணுவத்திடம் இந்த பொறுப்பை வழங்கிவிட்டு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்திருக்கின்ற கருத்து ஒரு வேடிக்கையாக உள்ளது எனத் தெரிவித்தார்.