செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கான எச்சரிக்கை!

200 0

வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கொவிட் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கொவிட் தொற்று உறுதியானர்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் செல்லப் பிராணிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

இலங்கையில் முதல் முறையாக விலங்கு ஒன்றிற்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் மனிதர்களில் இருந்தே விலங்குகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. எனவே வீட்டில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானால், பிராணிகளுடன் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்புகளைக் தவிர்ப்பது சிறந்ததாகும்.

எவ்வாறிருப்பினும், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதினதாக இதுவரையில் தகவல்கள் பதிவாகவில்லை. எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அண்மையில் சிங்கம் ஒன்றுக்கும், வரிக்குதிரை குட்டி ஒன்றுக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானது.

இந்நிலையில், தொற்றுறுதியான சிங்கத்தின் இணையான பெண் சிங்கத்திற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைரஸ் பரிசோதனைக்காக சிங்கத்தின் மலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் வனஜீவராசிகள் திணைக்கத்தினரால், சிங்கத்தின் நீர்த்துளி மாதிரிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சிங்கத்தின் குட்டிகளிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கம் பராமரிக்கப்படும் கூண்டுக்கு அருகில் உள்ள கூண்டில் உள்ள குரங்கிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள், பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்திய பீடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அந்த குரங்கிற்கு கொவிட்-19 தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எவ்வாறிருப்பினும், குறித்த சிங்கத்திற்கு எவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியானது என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை. அந்த சிங்கத்தை பராமரித்த மிருகக்காட்சி சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து வைரஸ் பரவியதா என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்திய பீடத்தின் விரிவுரையாளரான கலாநிதி டிலான் சத்தரசிங்க தெரிவித்துள்ளார்.