மக்கள் வெளியில் நடமாடுவதைப் பார்த்தால், நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகம் ஏற்படுவதாக, இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
பாரியளவிலான மக்கள் வீதிகளில் நடமாடுவதாகவும், தேவையான அர்ப்பணிப்புக்களை மக்கள் செய்யவில்லை என்றால், பயணக்கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தொடர்ந்து அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு இரண்டாயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். இது ஆபத்தான நிலைமை எனவும் தெரிவிக்கும் அவர், நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அலைகளுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் அலைகள் உருவாகலாமெனவும், இதனால் மக்கள் பொறுப்போடு நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பினாலும், நாட்டில் அதிகளவானத் தொற்றாளர்கள் இனங்காணப்படுவார்களெனவும் அவர் எச்சரித்தார்.

