கொரோனா பயணத்தடை மீறிய பலருக்கு நடவடிக்கை!

267 0

அரசின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி பிரதேச மக்களை கொவிட் தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பயணத்தடை மீறிய பலர் பிடிக்கப்பட்டு எச்சரிக்கை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று திடிரென கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன் தலைமையிலான குழுவினர் காலை முதல் பெரியநீலாவனை, மருதமுனை, கல்முனை ,வரையிலான பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் பயணம் செய்த பாதசாரிகள் மற்றும் வாகனங்களை பரிசோதனை செய்து உரிய அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தவர்களுக்கு பி.சி ஆர் பரிசோதனை செய்ததுடன் குறித்த சிலருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பிரதான வீதிகளில் பயணம் செய்த வாகனங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரது பயண அனுமதி பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு இருந்ததுடன் அனுமதி பத்திரங்களை முறையாக பெற்று பயணிக்காத நபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.

கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று தீவீரமடைவதை தொடர்ந்து அதனை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றினை தடுத்து பிரதேச மக்களை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்தும் இவ்வாறான வீதி சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட் தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கு பிரதேச மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இத்திடீர் கண்காணிப்பு நடவடிக்கையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி உட்பட பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் இராணுவம் கூட்டாக இணைந்து முன்னெடுத்திருந்தனர்.