கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரியா – நடேஸ் குடும்பம்

215 0

பிரியா – நடேஸ் குடும்பம் தற்காலிகமாக கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு பெர்த்தில் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அந்நாட்டு குடிவரவு அமைச்சர் Alex Hawke இன்றைய தினம் அறிவித்துள்ளார்.

குடிவரவு அமைச்சர் Alex Hawke தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக்குடும்பம் தற்போதைக்கு தடுப்பு முகாமைவிட்டு வெளியே வாழ்வதற்கு அனுமதித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இது தொடர்பில் Alex Hawke கூறுகையில்,

இந்த அறிவிப்பு பிரியா – நடேஸ் குடும்பம் நிரந்தர விசா ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான வழியைத் திறக்கவில்லை. எனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி தற்காலிகமாக இவர்கள் community detentionஇல் வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

குருதித்தொற்றுக்காக பெர்த்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் தருணிகாவுடன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வாழும் வகையில் பெர்த்தில் இக்குடும்பம் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்படுகிறது.

இதன்படி community detention placementஇன் கீழ் பாடசாலைகள் மற்றும் ஆதரவு சேவைகளை இலகுவில் பெறக்கூடிய இடமொன்றில் இவர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி பிரியா – நடேஸ் குடும்பம் சட்டப்போராட்டத்தை தொடரும் பின்னணியில், தடுப்புக்காவலில் சிறுவர்களை வைத்திருப்பது தொடர்பிலான சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு “பொருத்தமான இரக்கத்தை” காண்பிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பிரியா – நடேஸ் தம்பதியரின் இரண்டாவது மகள் தருணிகா பெர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைியல் இவருடன் தாயார் பிரியா மாத்திரம் பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தந்தையும், சகோதரி கோபிகாவும் கிறிஸ்மஸ் தீவிலேயே தங்கியிருந்த நிலையில் அமைச்சரின் இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் பெர்த் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.