ஜனாதிபதி வேட்பாளராக குமார வெல்கம! – எதிர்கட்சி வகுக்கும் திட்டங்கள்

215 0

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான திட்டங்கள், எதிர்க்கட்சி முகாமில் சில பிரிவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினரான குமார வெல்கமா, 2019ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளில் சேர்ந்தார்.

அத்துடன், புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் குமார வெல்கம செயற்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, எதிர்க்கட்சி இப்போது தீவிரமான உள் அதிகாரப் போராட்டத்துடன் குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்களையாவது அடுத்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான பட்டாலி சம்பிக ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் அடங்குவர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.