ஓட்டமாவடியில் 14 பேருக்கு கோவிட் தொற்று

251 0

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் பதினான்கு கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்கள் 52 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கிடைக்கப்பட்ட பரிசோதனை முடிவின் படி பதினான்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் அனைவரும் தற்போது எமது பகுதிகளில் இடம்பெறும் தொற்றுக்களின் தாக்கங்களினை அறிந்து உங்களின் குடும்ப அங்கத்தவர்களின் மரணங்களுக்கு காரணமாகாமல் சுகாதார நடைமுறைகளை பேணி நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் வயதான பெற்றோர்களின் அல்லது நோய்வாய்ப்பட்ட உறவினர்களின் மரணங்களுக்கு நீங்களே காரணமாகி விடாதீர்கள். இந்த தொற்றின் தார்ப்பரியங்களை உணர்ந்து செயற்படுங்கள் என ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.