கொரோனா தடுப்பு மேலாண்மையில் உதவிகளை செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் பணிக்குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறித்து ஆலோசனை நடத்தியபோது, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், இந்தக் குழு, முதல்-அமைச்சர் தலைமையிலான நிபுணர் குழுவுக்கு கொரோனா தடுப்பு மேலாண்மையில் தேவையான உதவிகளை செய்வதற்காக அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் பணிக்குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் அரசு சாரா, அலுவல் சார்ந்த 13 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அரசு சாரா உறுப்பினர்களாக டாக்டர் பி.குகானந்தம், டாக்டர் குழந்தசாமி, சென்னை தேசிய தொற்றுநோய் ஆய்வு நிறுவன இயக்குநர் மனோஜ் முரேகர், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அரசு தரப்பு உறுப்பினர்களாக, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர், சிறப்பு பணி அதிகாரி, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குநர், தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண் இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குழுவின் உறுப்பினர் செயலாளராக சுகாதாரத் துறை இணை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவினர் அவ்வப்போது கூடி ஆலோசிப்பதுடன், எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் கண்காணிப்பார்கள். தேவைப்பட்டால் கூடுதல் உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசுத் துறைகளிலும் செயலாளராக ஆர்.பூர்ணலிங்கம் பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் சுகாதாரத் துறை செயலாளராக அவர் மிகமிக திறமையுடன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

