கொரோனாவுக்கு பலியான பெண் நீதிபதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

397 0

தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக கடந்த 5-ம் தேதியன்று பொறுப்பேற்றவர் நீதிபதி வனிதா. இவர் கொரோனா தொற்றின் காரணமாக பலியானார்.

தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக கடந்த 5-ம் தேதியன்று பொறுப்பேற்றவர் நீதிபதி வனிதா. இவர் கொரோனா தொற்றின் காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பலியானார். நீதிபதி வனிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவருடைய குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்று காரணமாக, தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையில், மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) பணியாற்றிய நீதிபதி வனிதா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நீதித்துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, சிறப்பு நேர்வாகக் கருதி ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.