கொழும்பு போட் சிற்றியும் புறக்கணிக்கப்படும் தமிழர்களும்

547 0

நிதி நகரத்தை மையப்படுத்திக் கொழும்பின் புநகர் பகுதியான  கோமகமவில் இயங்கும்  பல்கலைக்கழகம்–   அவுஸ்திரேலியா, பிரிட்டன். அயர்லான்ட். மற்றும் ஆபிரிக்கப் பல்கலைக்கழங்கள் பயிற்சிநெறிக்கான ஒத்துழைப்புகளை வழங்குகின்றன. 

 

கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் உள்ள கடல் பிரதேசத்தை மூடி சீன அரசினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின்.  வருமானங்கள் இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் உள்ளடக்கப்பட்டு வரவு செலவுத்திட்ட அறிக்கையில் காண்பிக்கப்படும் என்பதை நகரத்தின் தாய் நிறுவனமான சைனா கொமினிகேசன் கென்சக்ரன்ஸ் கொம்பனி (China Communications Constructions Company வெளியிட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கம் கூறுகின்றது.

ஆனால் இதெற்கொன உருவாக்கப்படவுள்ள பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்திற்கான நகல் வரைபு பற்றியே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இந்தச் சட்டமூலம் தனிநாட்டுக்குச் சமனானது என்ற கோணத்திலேயே பௌத்த குருமார் மற்றும் எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை முன்வைக்கின்றன.

ஆனால் இந்தச் சர்வதேச் வர்த்தக நிதி நகரம் தனிநாடல்ல என்றும் இதன் மொத்த நிலப்பரப்பும் இலங்கையுடன் இணைக்கப்பட்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறுகிறார். இலங்கை மக்கள் எந்தவேளையிலும் இந்த நகரத்துக்குள் சென்றுவர முடியுமெனவும் அவர் கூறுகின்றார்.

2014ஆம் ஆண்டு இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளாக 1,635 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 2015ஆம் ஆண்டில் 1161 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அது குறைவடைந்தது. 2019ஆம் ஆண்டில் 1,190 மில்லியன் அமெரிக்க டொலர்களே நேரடி வெளிநாட்டு முதலீடுகளாக கிடைத்தது. ஆகவே, தொடர்ச்சியாக இலங்கைத்தீவில் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்தே வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை கூறுகின்றது.

ஆகவே இலங்கைத்தீவின் மொத்தத் தேசிய உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டுமானால் சர்வதேச நேரடி முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமெனக் கூறுகிறார் அஜித் நிவாட்ப்பரால். இவர் இலங்கை வங்கியின் முன்னாள் ஆளுநர். ராஜபக்ச குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.

இதன் பின்னனியிலேயே இந்த வர்த்தக நிதி நகரம் தொடர்பாக இவர் இவ்வாறு கூறுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. ஆனால் மொதத் தேசிய உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய மூலோபாயமாகத்தான் கொழும்பு சர்வதேச வர்த்த நகரம் அமைக்கப்படுகின்றதென அரசியல்சார்பற்ற பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். இருந்தாலும் இந்தப் பிரதேசத்துக்கெனத் தனியான சட்டமூலம் உருவாக்கப்படுவதில் உள்நோக்கம் இருப்பதாகவும் அது இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் சமநிலையற்ற தன்மைக்கு வழி வகுக்குமெனவும் கூறுகின்றார் பொருளாதார நிபுணர் ஹர்ஷர  டி சில்வா.

இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இலங்கையின் பொருளாதார நிலமைகளை ஆரம்பகாலத்தில் இருந்தே விமர்சித்து வருகின்றார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுபற்றிய ஐயங்களை வெளியிட்டாலும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியலை எதிர்க்கும் தொனியிலேயே கருத்துக்களை முன்வைக்கின்றனர். மாறாகக் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின் உண்மையான பாதிப்புகள் அல்லது சாதகமான நிலமைகள் பற்றி சிங்கள அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்தோ, சிங்களப் பொருளாதார நிபுணர்களிடம் இருந்தோ இதுவரை நேர்மையான கருத்துக்கள் வெளிவரவேயில்லை.

இந்த நகரத்தின் ஊடாக நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையில் அதிகரிக்கும் என்பதுடன், அந்நியச் செலவாணி கையிருப்பும் உயர்வடையுமென அரசாங்கம் நம்புpன்றது. இந்த நம்பிக்கைகளோடு சிங்களப் பேராசிரியர்கள், துறைசாhந்த புலமையாளர்கள் பலர் பக்கபலமாக நின்று பௌத்த தேசியத்தை மையப்படுத்திய இலங்கைத் தீவின் வளர்ச்சிக்கு அறிவூட்டுகின்றனர்.

இந்த நகரத்தின் தாய் நிறுவனமான சைனா கொமினிகேசன் கென்சக்ரனஸ் கொம்பனி  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட முதலாவது அறிக்கை அந்த அறிவூட்டல்கள் தெரிகின்றன.

நிதியியல் மாவட்டம், மத்திய பூங்கா வாழ்விடம், சர்வதேசத் தீவு, கப்பல் தொகுதி மற்றும் தீவக வாழ்விடம் என பல அம்சங்களைக் கொண்ட ஒரு செயற்திட்டமாக இந்த நகரம் அமைந்துள்ளது. இதன் செயற்திட்டப் பணிகள் பூர்த்தியடைந்த பின்னர் 5.7மில்லியன் சதுர மீற்றர் விஸ்தீரனம் கொண்ட கட்டட வசதியைக் கொண்டிருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஏ தர வகுப்பு அலுவலகங்கள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாச விடுதி, கப்பல் தொகுதி, சில்லறை வர்த்தக மையங்கள், ஹோட்டல்கள் என தெற்காசியாவின் மையமாக இது மாறவுள்ளதெனவும் அந்த அறிக்கையில் கூறுகின்றது.

இந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வில் இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சூயுவான், நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே, துறைமுக நகரத்தின் திட்டப்பணிப்பாளர் நிஹால் பெர்னாண்டோ மற்றும் China Harbour Engineering Company பிரதி முதல்வர் ஹவாங் யோங்கே மற்றும் CHEC Port City Colombo இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜியாங் ஹவ்லியாங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2014 ஆண்டு செப்டம்பர் மாதம்  முதல் 2019நவம்பர் வரையான காலப்பகுதியை உள்ளடக்கி இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 83 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்பதே இந்த அறிக்கையின் பிரதான உள்ளடக்கமாக இருந்தது.

பொறியியலாளர் முதல் நிர்வாகிகள் வரை உயர் திறனும், அனுபவமும் கொண்ட இலங்கை ஊழியர்கள் அறிவுபூர்வமாக வளர்த்தெடுக்ப்பட்டிருக்கின்றனர். வேலைத்தளச் செயன்முறை விளக்கங்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பயிலுனர்களுக்கிடையிலான தொடர்பு, நுண்ணறிவு அடிப்படையிலான அறிவுப் போட்டிகள் அடங்கலாக வருடாந்தப் பணியாளர் பயிற்சித் திட்டங்களைத் தீவிரமாக ஊக்குவிப்பதிலும் இந்த நிதி நகரம் ஈடுபட்டுள்ளதென போட் சிற்றி முகாமையாளர் ஜியாங் ஹவ்லியாங் இந்த அறிக்கைக்கு மேலதிக விளக்கமளித்துள்ளார்.

2019 ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 620 பேருடன் 16 பயிற்சிச் செயலமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சிகளுக்காக 37மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு கொழும்பு சர்வதேச வாத்தக நிதி நகரத்தின் மூலம் சமூக அபிவிருத்தியை ஊக்குவித்து, இலங்கைத்தீவில் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் மேம்பாட்டை கண்காணித்து உள்நாட்டு சமூகத்திற்கு வெளிப்படையான நன்மைகளை வழங்குவதே நோக்கமாகும்.

இந்த நகரத்தில் இருந்து 37 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நீர்கொழும்புப் பிரதேச மீனவர்களின் கஷ்ட  நிலைமைகள் தொடர்பான விபரங்களைத் திரட்டிய பின்னர், அந்த மீனவர்களின் நலன்களுக்காக ரூபா 550 மில்லியன் தொகை நிதியுதவியாக வழங்கபட்டுள்ளது. ஏறத்தாழ 15 ஆயிரத்து 450 மீனவர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.

மீனவக் குடும்பங்களுக்காக 35 மருத்துவ முகாம்கள் அமைக்க்பட்டுள்ளன. நீர்கொழும்பில் இருந்து வத்தளை வரையுள்ள 77மீன்பிடி சங்கங்களுக்கு ரூபா 154மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரையில் மண்ணரிப்புப் பிரச்சனைகளுக்குத்தீர்வு காண கடற்கரைப் பிரதேசங்களை மறுசீரமைத்து, நீர்த்தடுப்பு அணைகள் நிர்மாணிப்பதற்கும் 300மில்லியன் ரூபா தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

உலக பல்கலைக்கழக விவாத சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்தல், கொழும்பு சர்வதேச வாத்தக நிதி நகரச் செயற்திட்டத்தின் வெகுசன ஊடக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு சிறுவர்களைத் தெரிவு செய்தல் மற்றும் உள்நாட்டில் இளைஞர், யுவதிகளை வலுவூட்டுவதற்காக தேசிய வியாபார முகாமைத்துவப் பல்கலைக்கழகத்துடன்  (National School of Business Management- NSBM Green University) இணைந்து பங்குடமையை ஏற்படுத்தல் அடங்கலாக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தனியார் துறையோடு இலங்கை அரசாங்கம் சேர்ந்து இயக்கும் இந்தப் பல்கலைக்கழகம் 2017 ஆம் ஆண்டு கொழும்பு கோமகப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. தற்போது பத்தாயிரம் மாணவர்கள் வரை கற்கின்றனர். இதனுடன் இணைந்து அவுஸ்திரேலியா. பிரிட்டன். அயர்லான்ட். மற்றும் ஆபிரிக்கப் பல்கலைக்கழங்கள் பயிற்சிநெறியை நடத்துகின்றன.

1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இத்திட்டத்திற்காக 269 ஹெக்டேயர் கடலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 178 ஹெக்டேயர்தான் வணிக ரீதியான நிலமாக உள்ளது. இதற்காக மைத்திரி ரணில் அரசாங்கம் முத்தரப்பு உடன்படிக்கையை 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திட்டது. 990 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதுவரை முதலீடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

269 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வணிக ரீதியாக பெறுமதியாகவுள்ள 178 ஹெக்டேயர் நிலபரப்பில் வேலைத்திட்டத்தை உருவாக்கும் நிறுவனத்துக்கு 116 ஹெக்டேயர் நிலப்பரப்பு வழங்கப்படும் என்பதுடன், 62 ஹெக்டேயர் நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானதாகவும் 91 ஹெக்டேயர் பொது நிலப்பரபாக அரசாங்கத்தின் கீழ் இருக்கும். உருவாக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு, புதிய நிலப்பரப்பாக இலங்கையின் வரைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நகரத்தில் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டு  நேரடி முதலீடு நாட்டிற்குள் கிடைக்குமென கொழும்பு  துறைமுக நகரத்தின் நிர்வாக செயற்திட்டப் பணிப்பாளர் ராஜா எதிரிசூரிய தெரிவித்தார்.

ஆகவே இந்த நகரத்தின் மூலம் இலங்கை சீன அரசின் கொலனியாகிவிடும் என்று எதிர்க்கட்சிகள், பௌத்தகுருமார் கூறுவது வெறுமனே எதிர்ப்பு அரசியல் மாத்திரமே. இதன் மூலம் சிங்கள மக்களுக்கே வரப்பிரசாதம் என்பதை மேற்படி தகவல்கள் காண்பிக்கின்றன. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இத் திட்டத்தில் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பல்கலைக்கழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய குறிப்பிட்ட சில தமிழ் முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமே அங்கு கற்்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கைத் தீவை மையப்படுத்தி உருவான இந்தோ- பசுபிக் பிராந்தியப் போட்டியில் இலங்கை சிக்குண்டுள்ளதெனக் கூறினாலும், பொருளாதார ரீதியாகச் சீனாவைப் பிரதானப்படுத்தி சிங்கள ஆட்சியாளர்கள் முன்னேறுவதை அமெரிக்கா இந்திய அரசுகள் எதிர்க்காது என்பதையே இது காட்டுகின்றது.

மேற்படி நகரத்தை மையப்படுத்திய என்.எஸ்.பி.எம் பல்கலைக்கழகம்கூட மேற்குலக வல்லரசுகளின் ஆதரவோடு இயங்குவதென்பது, எதிர்காலத்தில் போட் சிற்றியைத் தாம் கையகப்படுத்த முடியுமென்ற நம்பிக்கைதான்.

ஏனெனில் உலகப் புகழ்பெற்ற பிரித்தானியாவைச் சேர்ந்த முதலீட்டாளரும் ரோத்ஸ்சைல்ட் குடும்ப உறுப்பினருமான நதானியேல் ரோத்ஸ்சைல்ட் (Nathaniel Rothschild) வர்த்தகச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சென்ற ஜனவரி மாதம் கொழும்புக்கு வந்திருந்தார். கொழும்புத் துறைமுக வர்த்தக நிதி நகரத்துக்கும் சென்று பார்வையிட்டிருக்கிறார்.

அவருடன் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல பிரித்தானிய அரசியல்வாதியும் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினருமான நிரஞ்சன் தேவா ஆதித்ய மற்றும் வர்த்தகத் துறை விற்பன்னரான ராஜன் பிரிட்டோ ஆகியோரும் வருகை தந்திருக்கின்றனர்.

நதானியேலின் ரோத்ஸ்சைல்ட்  வங்கி ஒன்றும் போட் சிற்றிக்குள் அமையவுள்ளது. இதனை ஏற்பாடு செய்யும் நிரஞ்சன் தேவா என்பவர் சிங்கள ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளோடும்  நெரங்கிய இராஜதந்திர உறவைப் பேணி வருபவர்.

ஆகவே இலங்கை அரசும் அதன் சிங்கள ஆட்சியாளர்களும் மிகத் தெளிவாகவே பயணிக்கின்றனர். இங்கு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தியாவை ஒதுக்கிவிட்டு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளோடும் ரோப்பிய நாடுகளுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆசியப் பிராந்தியத்தில் இலங்கையை தனித்துவம் மிக்க நாடாக மாற்ற வேண்டுமென்ற சிங்கள ஆட்சியாளர்களின் எண்ணம் ஈடேறியுள்ளது.

ஈழப் போரை இல்லாதொழிப்பதற்காக 2009 ஆம் ஆண்டு மே மாதம்வரை  இந்தியா சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கசப்பாண உண்மையை இந்தியா உணர மறுக்கிறது.

 -அ.நிக்ஸன்-